ADVERTISEMENT

தெலங்கானாவில் காலை உணவு வழங்கும் திட்டம் அறிமுகம் 

11:27 PM Oct 06, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 1543 பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு இத்திட்டம் தொடங்கப்பட்டது. அடுத்த கட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008 பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவுபடுத்தினார்.

இத்திட்டத்தை தொடர்ந்து தெலங்கானா மாநிலத்திலும் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த தெலங்கானா மாநில அரசு ஆர்வம் தெரிவித்திருந்தது. அதற்காகத் தமிழ்நாடு அரசைத் தொடர்பு கொண்டு தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நேரில் வந்து பார்வையிட அம்மாநில உயர் அலுவலர்கள் ஆர்வம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து தெலங்கானா மாநில அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் முதலமைச்சரின் தமிழ்நாடு காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட தெலங்கானாவிலிருந்து மூத்த அரசு அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி சென்னை வந்திருந்தனர்.

அப்போது திட்டத்தின் செயல்பாடுகளை நேரில் கண்ட தெலங்கானா மாநில அரசு அதிகாரிகள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை பற்றியும் அது செயல்படுத்தப்படும் விதம் குறித்தும் கூறியபோது, “இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” எனத் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து தெலங்கானா மாநில அரசு 1 ஆம் வகுப்பு முதல் 10 பத்தாம் வகுப்பு வரையில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தெலங்கானாவில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படும் எனத் தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, காலை உணவுத் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர ராவ் இத்திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தெலங்கானா மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் ஆகியோர் மாநிலம் முழுவதும் இந்தத் திட்டத்தை இன்று காலை துவக்கி வைத்தனர். அந்த வகையில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் கே.டி. ராமாராவ் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தி மகிழ்ந்தார். அதே சமயம் 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தும் இத்திட்டத்தால் 43 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT