ரஷ்யா, உக்ரைன் மீது மூன்றாவது நாளாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் மக்கள் தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதற்கிடையே உக்ரைனில் உள்ள இந்தியர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக அழைத்து வந்து, அங்கிருந்து அவர்களை விமானங்கள் மூலம் மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, ருமேனியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் இந்திய மாணவர்களை மீட்கும் பணி தொடர்ந்து இடைவிடாது நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், உக்ரைனில் இருந்து சுமார் 470- க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சாலை மார்க்கமாக ருமேனியாவுக்கு வந்தடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக புக்காரெஸ்ட் நகருக்கு அழைத்து வரப்பட்டனர். அதைத் தொடர்ந்து, அவர்களில் 219 இந்திய மாணவர்களுடன் ஏர் இந்தியாவின் முதல் விமானம் மும்பைக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானம் இன்று (26/02/2022) இரவு 09.00 மணியளவில் மும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஹங்கேரியில் இருந்து இரண்டாவது விமானம் புறப்பட உள்ளது. புடாபெஸ்டில் இருந்து புறப்படும் இரண்டாவது விமானம் நாளை (27/02/2022) அதிகாலை 02.00 மணியளவில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த தகவலையும், வீடியோ பதிவையும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது ஹங்கேரியில் உள்ள இந்திய தூதரகம்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதில், நாம் முன்னேறி வருகிறோம். எங்கள் குழுவினர் 24 மணி நேரமும் களப்பணியாற்றி வருகின்றனர். அதை நான் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன். 219 இந்தியர்களுடன் மும்பைக்கு முதல் விமானம் ருமேனியாவில் இருந்து புறப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளவர், ருமேனியா அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்கா அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்பதற்காக, டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், அனுமதி கிடைத்தவுடன் புறப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.