Skip to main content

உளவுத்துறை என்னை மிரட்டியது -கதிர் ஆனந்த் எம்.பி பகீர் குற்றச்சாட்டு!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

Intelligence- intimidated me - Kadir Anand -MP -shocking- accused

 

டெல்லி சாணக்யபுரியில் உள்ள 'தமிழ்நாடு' இல்லத்தில், உளவுத்துறை அதிகாரிகள் எனக் கூறிக்கொண்ட சிலர் தன்னை மிரட்டியதாக தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகனும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 

இன்று (22.09.2020) கூடிய நாடாளுமன்றத்தில், மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் சாபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் ஒன்றை தெரிவித்தார். அதில், "நான் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்தின் அறைக்குள், அத்துமீறி அடையாளம் தெரியாத சில நபர்கள் நுழைந்தனர். அவர்கள் தங்களை உளவுத்துறையினர் எனக் கூறிக் கொண்டு, நாடாளுமன்றக் கூட்டத்தில் தி.மு.க எழுப்பப் போகும் விவாதம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளில் கட்சியின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினர். மேலும், தமிழக அரசியல் நிலவரம் என்ன, நாடாளுமன்ற நேரத்தில் என்ன விவகாரங்களைப் பேசப் போகீறீர்கள் என மிரட்டும் தொனியில் கேட்டதாக கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இவரின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து காங்கிரசும், தங்களிடம் போலீசார் அத்துமீறி நடப்பதாகப் புகார் கூறியது. இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

 

இந்தக் குற்றச்சாட்டு குறித்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, பாதிக்கப்பட்டவர்களை எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்கக் கேட்டுக் கொண்டார். அப்போது எழுந்த தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இது அவமானகரமான விஷயம் என்று பேசினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ஒவ்வொரு உறுப்பினரின் பாதுகாப்பையும் உறுதிசெய்வது சபாநாயகரின் கடமை  எனக் குறிப்பிட்டார்.

 

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த முதல்வர், "அவர்களை யாராவது மிரட்ட முடியுமா. அதுவும், துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா? அவர்கள் மிரட்டலுக்குப் பயப்படுவார்கள் எனச் சொன்னால் யாராவது நம்புவார்களா? தி.மு.க.வின் சாதாரணத் தொண்டனைக் கூட யாரும் மிரட்ட முடியாது." என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

“மீண்டும் மிசா வரும்” - அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Minister Duraimurugan warns that misa will come again

வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் அறிவித்ததையடுத்து இன்று குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே திறக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.

அப்போது, “பிரதமர் மோடி வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார். ஆனால் நாங்கள் தியாகம் செய்ததைபோல் அவர்கள் செய்துள்ளார்களா? நாங்கள் தியாகத்திலேயே வளர்ந்தவர்கள். மிசாவில் நான் கைதான போது எனது காலரை எனது ஒரு வயது மகன் கதிர் ஆனந்த் பிடித்துக் கொண்டான். அந்தப் பிஞ்சு கையை காவல்துறையினர் தூக்கி எறிந்து என்னை கைது செய்து சென்றார்கள். அதற்குப் பிறகு மூன்று மாத காலம் அவர்களை பார்க்க முடியவில்லை. மூன்று மாதம் கழித்து எனது மனைவி எனது ஒரு வயது மகன் கதிரானந்தை சிறைக்கு அழைத்து வந்தார்.

அவனைப் பார்த்தபோது கட்டித் தழுவி கொள்ளலாம் என ஏங்கினேன். கட்டி தழுவ முயற்சித்த போது அங்கு இருந்த காவலர் ஒருவர் நீ குற்றவாளி குழந்தையை தொடக்கூடாது. நீ அவனை ஏதாவது (கொலை) செய்து விடுவாய் என கூறி தடுத்துவிட்டார். நானா எனது மகனை ஏதாவது செய்து விடுவேன் என அப்போதே கண் கலங்கினேன். எனது மகன் கையை நீட்டி அப்பா... அப்பா... என கூறினான்.

அதற்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்து ஒரு வருட காலம் எனது மகனை நான் தொட்டதே இல்லை. அந்த அளவுக்கு வலியை அனுபவித்தவர்கள் நாங்கள்” என கண் கலங்கி நா தழுதழுத்த குரலில் பேசினார்.

எங்களைப் பார்த்து வாரிசு அரசியலென மோடி பேசுகிறார். மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கி இந்தியா போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் ஜனநாயகக் குரல் வலையை நெரிக்கும் காரியத்தை மத்திய அரசு செய்கிறார்கள். ஆக இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது போல் ஒரே கட்சியை கொண்டுவர முயற்சிக்கிறார்கள். வடகொரியாவில் நடப்பது போல் ஒரு ஆட்சியை இங்கு நடத்த வேண்டும் என பாரதிய ஜனதாவினர் கருதுகிறார்கள். நீங்கள் போடுகிற ஓட்டு ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக போடுகிற ஓட்டு. இல்லாவிட்டால் மீண்டும் ஒரு மிசா வரும் என பேசினார்.