Skip to main content

ஊழியர்களைக் குடும்பத்தோடு தாயகம் மீட்டுவந்த இன்ஃபோசிஸ் நிறுவனம்...

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

infosys brought back employees from america

 

கரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் சிக்கியிருந்த தங்களது நிறுவனத்தின் 206 இந்திய ஊழியர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் தனி விமானம் மூலம் இந்தியா அழைத்து வந்துள்ளது இன்ஃபோசிஸ் நிறுவனம்.

 

கரோனா வைரஸ் பரவல்  காரணமாகச் சர்வதேச விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவில் உள்ள இன்ஃபோசிஸ் அலுவலகங்களில் பணியாற்றச் சென்ற நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் அங்கேயே சிக்கிக்கொள்ளும் சூழல் உருவானது. இந்நிலையில் ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் நலன் கருதி தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் 206 ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் இந்தியா அழைத்து வந்துள்ளது இன்ஃபோசிஸ் நிறுவனம்.

 

இந்தியாவில் பணியாற்ற விருப்பம் தெரிவித்தோர் மற்றும் இந்தியாவில் பணியாற்ற வேண்டிய சூழலில் இருப்போர் ஆகியோரைத் தேர்வு செய்து இந்த விமானத்தில் அழைத்து வந்தது அந்நிறுவனம். ஞாயிற்றுக் கிழமையன்று சான்ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து 206 ஊழியர்கள், 100-க்கும் மேற்பட்ட அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருடன் புறப்பட்ட தனி விமானம் நேற்று பெங்களூரு வந்தடைந்தது. அதன்பின்னர் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் விதிமுறைப்படி பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இன்ஃபோசிஸ் நிறுவனரின் மனைவிக்கு எம்.பி. பதவி; பிரதமர் மோடி வாழ்த்து

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Greetings Prime Minister Modi for Infosys founder's wife gets MP post

மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்களின் பதவிக்கான சீட்டுகள் உள்ளன. இதில், 238 எம்.பிக்களை அந்தந்த மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள். மீதமுள்ள 12 எம்.பி.க்கள், மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டோ அல்லது ஜனாதிபதியால் நேரடியாகவோ நியமிக்கப்படுவார்கள். இலக்கியம், கலை, அறிவியல், சமூக சேவை ஆகியவற்றில் சிறப்பாகப் பங்களிப்பு வழங்கியவர்களுக்கு ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு நியமன எம்.பி பதவி வழங்கப்படும். 

அந்த வகையில், தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாருமான சுதா மூர்த்தியை மாநிலங்களவை எம்.பியாக ஜனாதிபதி திரெளபதி முர்மு நியமனம் செய்துள்ளார். 

இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுதா மூர்த்திக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இந்தியக் குடியரசுத் தலைவர், சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராகப் பரிந்துரை செய்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  சமூகப் பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா மூர்த்தியின் பங்களிப்பு மகத்தானது மற்றும் ஊக்கமளிக்கிறது. மாநிலங்களவையில் அவரது இருப்பு நமது ‘மகளிர் சக்தி’க்கு ஒரு சக்தி வாய்ந்த சான்றாகும். இது நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் வலிமை மற்றும் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறது. அவரது பாராளுமன்ற பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். 

1950 ஆம் ஆண்டில் கர்நாடகா மாநிலத்தில் பிறந்த சுதா மூர்த்தி, எழுத்தாளர், கல்வியாளர் என பன்முகங்களைக் கொண்டவர். எழுத்துத் துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி கடந்த 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டில், சுதா மூர்த்திக்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி கெளரவித்தது. இன்ஃபோசிஸ் அறக்கட்டளையில் முன்னாள் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த சுதா மூர்த்தி, உலக பணக்காரரான பில்கேட்ஸ் அறக்கட்டளையின் பொது சுகாதாரத்தில் உறுப்பினராக இருந்துள்ளார். சுதா மூர்த்தியின் மகளான அக்‌ஷதா மூர்த்தி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.