
இந்திய ராணுவ வீரர்கள், டெல்லி அரசு ஊழியர்கள், கோடீஸ்வரர்கள் என சுமார் 16.8 கோடி பேரின் தகவல்களைத்திருடியதாக 9 தனி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய 6 வங்கிகள் உட்பட பல வங்கிகளின் இணையதளங்களுக்குள் ஊடுருவி 9 பேர் கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது. இவர்கள் தனி நபர்களின் தகவல்கள் மட்டுமல்லாமல் அரசின் ரகசியத்தகவல்களையும் திருடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இணையதளங்களில் ஊடுருவி தகவல்களைத்திருடிய 9 பேர் கொண்டகும்பலை ஹைதராபாத்தைச் சேர்ந்த சைபராபாத் போலீசார் கைது செய்துள்ளது. நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தனி நபர் தகவல் திருட்டு மோசடி இது என போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் 1.1 கோடி பேர் மற்றும் பேஸ்புக் பயன்படுத்தும் 75 லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது. 1.2 கோடி வாட்ஸ்அப் பயனர்கள், டெல்லி அரசின் 35 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தகவல்களும் திருடப்பட்டுள்ளது. ராணுவத்தில் பணிபுரியும் 2.5 லட்சம் வீரர்கள் பற்றிய தகவல்களையும் திருடி உள்ளது.
மேலும் இந்த 9 பேர் கொண்ட கும்பல், கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் பற்றிய தகவல்களையும் திருடியது அம்பலமாகியுள்ளது. இப்படி பல கோடி பேரின் தகவல்களைத்திருடிய 9 பேரும் டெல்லி மற்றும் புனேவை சேர்ந்தவர்கள் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் வாடிக்கையாளர் பெயர், பணி, விவரம், ஆதார் எண், பான் கார்டு எண், கிரெடிட்கார்டு, டெபிட் கார்டு விவரங்கள், ஒவ்வொருவரின் முகவரி, தொலைப்பேசி எண்கள், வங்கியில் உள்ள இதர விவரங்கள் என பல்வேறு தரப்பட்ட மக்கள் பற்றிய விவரங்களை திருடி 140 வகைகளாகப் பிரித்து பல கோடிக்கு விற்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)