ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் அம்மாநிலத்தில் நேற்று (08.10.2024) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், பா.ஜ.க 48 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு அதிக இடங்களை பெற்ற பா.ஜ.க, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. அம்மாநிலத்தில் முதல்வராக இருந்த நயாப் சிங் சைனி, இம்முறையும் ஆட்சி அமைப்பார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில், பா.ஜ.கவில் இருந்து பிரிந்து சென்று சுயேட்சையாக போட்டியிட்ட நாட்டின் மிகப்பெரிய பணக்கார பெண்ணான சாவித்திரி ஜிண்டால் வெற்றி பெற்றிருப்பது தற்போது ஹரியானா அரசியலில் பேசுபொருளாகி வருகிறது. ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் லிமிடெட், ஜேஎஸ்டபிள்யூ உள்ளிட்ட வணிக நிறுவனங்களை ஆரம்பித்து, நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபரானவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால். இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றி வந்துள்ளார். இவர் மறைந்ததையடுத்து, அவரது மனைவி சாவித்திரி ஜிண்டால் காங்கிரஸ் சார்பில் 2005 மற்றும் 2009ஆம் ஆண்டு ஹிசார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்த சாவித்ரி ஜிண்டால், கடந்த மார்ச் மாதம் அக்கட்சியில் இருந்து பிரிந்து பா.ஜ.கவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில் தான், சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தனக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருந்த சாவித்ரி ஜிண்டாலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பா.ஜ.க சார்பில், சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட வேண்டும் என்று சாவித்ரி விருப்பம் தெரிவித்தும், அவருக்கு பா.ஜ.க மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை. இதில் அதிருப்தியடைந்த சாவித்ரி, ஹிசார் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இதனால், பா.ஜ.க தலைமை, சாவித்ரி ஜிண்டாலை கட்சியில் இருந்து நீக்கியது.
இது குறித்து அவர் பேசுகையில், ‘ஹிசார் மக்கள் எனது குடும்பம், அவர்கள்தான் நான் போட்டியிட வேண்டும் என்று விரும்பினர். ஹிசாரின் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்காக சேவை செய்வதாக நான் உறுதியளித்துள்ளேன். ஹிசார் மக்கள் எனது குடும்பம் மற்றும் ஓம் பிரகாஷ் ஜிண்டால் இந்த குடும்பத்துடன் எனது உறவை ஏற்படுத்தியுள்ளார். ஜிண்டால் குடும்பம் எப்போதும் ஹிசாருக்கு சேவை செய்து வருகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், அவர்களின் நம்பிக்கையை நிலைநாட்டவும் நான் முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறேன்’ என்று கூறினார்.
சட்டமன்றத் தேர்தலின் போது, சாவித்ரி ஜிண்டால் பா.ஜ.கவை கடுமையாக விமர்சனம் செய்து பரப்புரை மேற்கொண்டார். இந்த நிலையில், ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், ஹிசார் தொகுதியில் போட்டியிட்ட சாவித்ரி ஜிண்டால், 18,941 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் கமல் குப்தாவை தோற்கடித்துள்ளார். இதன்மூலம் சாவித்ரி ஜிண்டால், ஹிசார் தொகுதியின் 3வது முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பா.ஜ.கவின் குருஷேத்ரா தொகுதி எம்.பி நவீன் ஜிண்டாலின் தாயாரான சாவித்ரி ஜிண்டால், நாட்டின் மிகப்பெரிய பணக்கார பெண் தொழிலதிபராக இருந்து வருகிறார். செப்டம்பர் 28 அன்று ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, சாவித்ரி ஜிண்டால், 36.3 பில்லியன் டாலர் மதிப்புடன் ஐந்தாவது பணக்கார இந்தியராக உள்ளார். நாட்டின் மிகப்பெரிய பணக்கார பெண்மணியான அவர், இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களில் ஒரே பெண் பில்லியனர் ஆவார்.