
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். 9 இடங்களில் இலக்குகளைக் குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இத்தகைய சூழலில் தான் ஜம்மு - காஷ்மீரின் எல்லைக் கிராமத்தில் நேற்று (08.05.2025) இரவு பாகிஸ்தான் நடத்திய கடுமையான தாக்குதலின் போது பொதுமக்களின் வீடுகள் மற்றும் கடைகள் எரிந்து சேதமடைந்தன. பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் வாகனங்கள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. அதே சமயம் காஷ்மீரின் சம்பா வழியாக ஜெய்ஸ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த 7 பேர் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றனர். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்பு படைவீரர்கள் 7 பேரையும் சுட்டுக் கொன்றனர். இதன் மூலம் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற ஜெய்ஸ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த 7 பேரின் இந்த முயற்சியானது முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் என்பவர் உயிரிழந்துள்ளார். இவர் ஆந்திரப் பிரதேச மாநிலம் சத்தியசாய் மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளிதண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இவரது மறைவுக்கு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சத்யசாய் மாவட்டம், பெனுகொண்டா சட்டமன்றத் தொகுதியின் கோரண்ட்லா மண்டலத்தைச் சேர்ந்த முரளி நாயக் என்ற ராணுவ வீரர், நாட்டின் பாதுகாப்பில் தனது இன்னுயிரை இழந்தது துயரமானது. நாட்டிற்காகத் தனது இன்னுயிரை ஈந்த தியாகி முரளி நாயக்கிற்கு அஞ்சலிகள். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.