Skip to main content

தனியுரிமை கொள்கைகளில் மாற்றம்: வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு இந்திய நாடாளுமன்றம் நோட்டீஸ்!  

Published on 18/01/2021 | Edited on 19/01/2021

 

parliament

 

வாட்ஸ்அப் நிறுவனம், சமீபத்தில் தனது சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் மாற்றம் கொண்டுவந்தது. இது பயனர்களின் தனியுரிமைக்கு எதிரான செயல் என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததுடன், வாட்ஸ்அப் பயனர்கள் ‘சிக்னல்’, ‘டெலிகிராம்’ உள்ளிட்ட வேறு செயலிகளுக்கு மாறத் தொடங்கினர்.

 

இதனைத் தொடர்ந்து, வாட்ஸ்அப் நிறுவனம், பயனர்களின் தனிப்பட்ட மெசேஜ்களைப் பாதுகாக்கும் என தெரிவித்ததோடு, புதிய தனியுரிமை கொள்கைகளை ஏற்காவிட்டாலும் அவர்களின் கணக்குகள் முடக்கப்படாது எனவும், சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில்  கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்களை அமல்படுத்துவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

 

இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம், சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் கொண்டுவந்துள்ள மாற்றம் குறித்து இந்திய நாடாளுமன்றம் விசாரணை நடத்தப்போவதாக தகவல் வெளியாகிவுள்ளது. வரும் 21ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு, தகவல் தொழிற்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு, பேஸ்பூக் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர். 

Next Story

சோனியா காந்தி எம்.பி.யாக பதவியேற்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Sonia Gandhi sworn in as MP

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் நேற்றுடன் (03.04.2024) ஓய்வு பெற்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெற்றனர். அதே சமயம் இந்த காலியிடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி இன்று (04.04.2024) பதவியேற்றார். சோனியா காந்திக்கு மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதே போன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். கடந்த 1999 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி, கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன் முதலாக சோனியா காந்தி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பதவியேற்றுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சோனியா காந்தியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இது குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “இன்று ராஜ்யசபாவில் பதவியேற்று, தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுச்சி மிக்க எனது நல்வாழ்த்துகள். பாராளுமன்ற உத்தியை தொடர்ந்து வழிநடத்தும் அவர்,  மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றி முடித்துள்ளார். இப்போது நானும் எனது சக உறுப்பினர்களும் ராஜ்யசபையில் அவரது வரவை எதிர்பார்க்கிறோம். அவரது பதவிக் காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.