
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாதிகளை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் உள்பட முப்படைகள் கூட்டாக இணைந்து இன்று (07-05-25) நள்ளிரவு 1 மணியளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில், 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காகப் பழிதீர்க்கவே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆன பெண்கள் நெற்றி வடுகில் வைக்கும் குங்குமத்திற்கு, ‘சிந்தூர்’ என இந்தி மொழியில் அழைக்கப்படும். இந்த தாக்குதலில் பல பெண்கள், கண் எதிரில் தங்கள் கணவர்களை இழந்து தங்கள் குங்குமத்தை இழந்துள்ளனர். பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிக்கும், ராணுவ நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி தாக்குதலான ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து டெல்லியில் மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, லெப்டினன்ட் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். பஹல்காம் தாக்குதலில் தங்கள் கணவர்களை இழந்த பெண்களின் கண்ணீரைத் துடைக்கும் விதமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து பெண் அதிகாரிகளை கொண்டே விவரங்களை வெளியிட வைத்திருப்பது உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பெண் அதிகாரிகள் யார் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
லெப்டினன்ட் சோபியா குரேஷி:-

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சோபியா குரேஷி, வலிமையான ராணுவ பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். சோபியா குரேஷின் தாத்தா இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். அவரது அப்பா மத ஆசிரியராக சில ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். சிறு வயதில் இருந்து ராணுவ வாழ்க்கையில் வளர்ந்த அவர், அத்தகைய சூழலை நன்கு அறிந்துள்ளார். அவரது கொள்ளு தாத்தா உள்பட மற்ற உறவினர்கள் இந்திய ராணுவ மட்டுமில்லாது பிரிட்டீஸ் ராணுவத்திலும் பணியாற்றியுள்ளனர். ராணுவத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் தானும் ராணுவத்தில் சேர சோபியா குரேஷி முடிவு செய்தார்.
அதன்படி, கடந்த 1999ஆம் ஆண்டு அதிகாரிகள் பயிற்சி அகாடமி மூலம் இந்திய ராணுவத்தில் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி, நாடு முழுவதும் பல்வேறு பணிகளில் வகித்துள்ளார். ராணுவத்தில் சேர்ந்த அவர், சில ஆண்டுகளிலேயே பல சாதனைகளை படைத்தார். பஞ்சாப் எல்லையில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் பராக்ரம்’ என்ற திட்டத்தில் பங்காற்றியதற்காக அவர், ஜெனரல் அதிகாரி கமாண்டிங்-இன்- தலைமையிடம் (GOC-in-C) இருந்து பாராட்டு சான்றிதழ்களைப் பெற்றார். கடந்த 2006ஆம் ஆண்டு காங்கோவில் நடைபெற்ற ஐ.நா அமைதி காக்கும் பணிக்காக நாட்டில் உள்ள ஏராளமான அமைதி காக்கும் பயிற்சியாளர்களிடம் இருந்து சோபியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த மார்ச் 2016ஆம் ஆண்டில் ஏசியன் (ASEAN) பிளஸ் என்ற பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் ஒரு ராணுவப் பிரிவை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை கர்னல் சோபியா குரேஷி பெற்றார். ‘உடற்பயிற்சிப் படை 18’ (Force 18) என்று பெயிரடப்பட்ட அந்த பயிற்சி, இந்தியா இதுவரை நடத்திய மிகப்பெரிய வெளிநாட்டு ராணுவப் பயிற்சிகளின் ஒன்றாகும். ஏசியன் (ASEAN, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) பன்னாட்டு உறுப்பினர்களில், இந்தியா, ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா, கொரியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளது. மொத்தம் 18 படைப்பிரிவுகள் பங்கேற்ற அந்த ராணுவப் பயிற்சியில் ஒரு படைப்பிரிவை வழிநடத்திய ஒரே பெண் அதிகாரி கர்னல் சோபியா குரேஷி ஆவார். உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற கர்னல் சோபியா குரேஷி, மெக்கானிஸ்டு காலாட்படையின் அதிகாரி ஒருவர் திருமணம் செய்துள்ளார். இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த இவர், ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விங் கமாண்டர் வியோமிகா சிங்:-

‘வானத்தின் மகள்’ என்று பொருள் தரும் வியோமிகா என்ற பெயர் கொண்ட வியோமிகா சிங்கிற்கு, இந்திய விமானப் படை பயணம் சிறுவயதிலேயே தொடங்கிவிட்டது என்றே கூறலாம். பெயர் குறித்த காரணம் அறிந்தததால் என்னவோ, பள்ளி பருவத்தில் இருந்து விமானப் படையில் சேர வேண்டும் என்ற ஆசையில் வியோமிகா சிங் இருந்துள்ளார்.அதனால், பொறியியல் படிப்பு படித்து கொண்டிருக்கும் போதே, என்சிசி யில் (NCC) சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். தீராத விடாமுயற்சியிலான், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி ஹெலிகாப்டர் விமானியாக இந்திய விமானப் படையில் சேர்ந்தார்.
ஜம்மி காஷ்மீரில் உள்ள உயரமான பகுதிகளில் இருந்து வடக்கிழக்கில் உள்ள தொலைத்தூரப் பகுதிகள் வரை இந்தியாவின் மிகவும் சவாலான நிலப்பரப்புகளில் ஹெலிகாப்டர்களை இயக்கி சுமார் 2,500க்கும் மணி நேரங்களுக்கு மேல் பறந்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டில் அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு முக்கிய மீட்பு நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய வியோமிகா சிங், பொதுமக்களை வெளியேற்றுவதற்காக தீவிரமாக களமாடினார். பஹல்காமில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியா பதிலடி கொடுத்த பின்னர் நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், வியோமிகா சிங் நாட்டுக்கு விளக்கமளித்தது மட்டுமல்லாமல், இந்திய இராணுவம் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்ற விளக்கத்தை அளித்தார்.