Skip to main content

“எதிரிகளின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்படும்” - இந்திய ராணுவம் உறுதி!

Published on 10/05/2025 | Edited on 10/05/2025

 

Indian Army assure Enemy plans will be foiled 

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம் போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு - காஷ்மீரில் உள்ள ராஜோரி பகுதி கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அந்த வகையில் இந்த பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு - காஷ்மீர் அரசு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், “ராஜோரியில் இருந்து ஒரு துயரச் செய்தி கிடைத்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் நிர்வாக சேவைகளில் அர்ப்பணிப்புள்ள அதிகாரியை நாம் இழந்துவிட்டோம். நேற்று தான் அவர் துணை முதல்வருடன் மாவட்டம் முழுவதும் சுற்றி வந்தார். நான் (முதல்வர் உமர் அப்துல்லா) தலைமை தாங்கிய ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொண்டார். இன்று ரஜோரி நகரத்தைக் குறிவைத்து பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் நடத்தியதில், நமது கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ராஜ்குமார் தாப்பா கொல்லப்பட்டார்.

அவரது வீட்டின் மீது பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கொடூரமான உயிரிழப்பு குறித்து எனது அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு - காஷ்மீர் அரசு அதிகாரியான ராஜ்குமார் தாப்பா மற்றும் பொதுமக்கள் 4 பேர் உள்ளிட்ட மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் இந்திய ராணுவத்தின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நமது மேற்கு எல்லைகளில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் (ட்ரோன்கள்) மற்றும் பிற ஆயுதத் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற ஒரு சம்பவத்தில், இன்று (10.05.2025) அதிகாலை 5 மணியளவில், அமிர்தசரஸின் காசா கண்டோமென்ட் மீது பல எதிரி ஆயுதம் ஏந்திய ட்ரோன்கள் பறப்பதைக் கண்டனர். இதனையடுத்து வான் பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாக ஈடுபடுத்தப்பட்டு ட்ரோன்கள் அழிக்கப்பட்டன. இந்தியாவின் இறையாண்மையை மீறுவதற்கும் பொதுமக்களை ஆபத்தில் ஆழ்த்துவதற்கும் பாகிஸ்தானின் அப்பட்டமான முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்திய ராணுவம் எதிரிகளின் சதித்திட்டங்களை முறியடிக்கும்” எனத் தெரிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்