Skip to main content

பரபரப்பான சூழலில் அக்னி V ஏவுகணையை சோதித்த இந்தியா!

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

AGNI 5

 

இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்சனை தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்த நிலையில், கடைசியாக இரு நாடுகளுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

 

இதனைத்தொடர்ந்து, இருநாடுகளும் விரைவில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதேநேரத்தில், இந்திய எல்லையில் சீனா அத்துமீறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் எல்லைப்பகுதியில் சீனா தொடர்ந்து கட்டுமானங்களை ஏற்படுத்திவருகிறது. இதனைத்தொடர்ந்து இந்தியாவும் எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதுடன், நவீன ஆயுதங்களையும் குவித்துள்ளது.

 

இந்தப் பரபரப்பான சூழலில் இந்திய இராணுவத்தின் ஸ்ட்ராட்டஜிக் ஃபோர்சஸ் கமாண்ட், அணு ஆயுத ஏவுகணையான  'அக்னி V' ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது. பொதுவாக ஏவுகணைகளை இராணுவத்தில் சேர்ப்பதற்கு முன்பு பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெறும். அதன்பிறகே அந்த ஏவுகணை இராணுவத்தில் சேர்க்கப்படும். ஏற்கனவே  'அக்னி V' ஏவுகணை 7 முறை சோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அணு ஆயுதங்களைக் கையாளும் ஸ்ட்ராட்டஜிக் ஃபோர்சஸ் கமாண்ட் அந்த ஏவுகணையை சோதித்துள்ளதால், விரைவில் 'அக்னி V' இந்திய இராணுவத்தில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

திட எரிபொருளில் இயங்கும் மூன்று கட்ட என்ஜின் அமைப்பைக் கொண்ட 'அக்னி V', 5000 கிலோமீட்டர் வரை சென்று, இலக்கை சிறிதும் குறிதவறாமல் தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை மூலம் சீனாவின் வடக்குப்பகுதியைக் கூட தென்னிந்தியாவிலிருந்து தாக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!

Published on 27/03/2022 | Edited on 27/03/2022

 

Successfully tested locally made missile!

 

விண்ணில் பறந்துச் சென்றுக் கொண்டிருக்கும் எதிரி இலக்குகளை தரையில் இருந்தவாறே பாய்ந்து இடைமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதித்தது. 

 

ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே நிறுத்தப்பட்டிருந்த சிறு கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அளித்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணைகள் நடுத்தர தொலைவிற்கு பறந்து சென்று தாக்கக் கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இச்சாதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையினருக்கு கடற்படை தளபதி வி.ஆர்.சௌத்ரி பாராட்டுத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் புதன்கிழமை பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

கிரிப்டோ சொத்துக்களை திருடி வடகொரியா ஏவுகணை சோதனை

Published on 08/02/2022 | Edited on 08/02/2022

 

north korea

 

அணு சக்தி சோதனை நடத்தவும், பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தவும் வடகொரியாவிற்கு ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் தடைகளை விதித்துள்ளது. இந்த தடைகளை மீறி சோதனை நடத்துவதற்காக அந்தநாட்டின் மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் வடகொரியா அண்மைக்காலமாக அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்தச்சூழலில் சுயாதீன தடைகள் கண்காணிப்பாளர்கள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் வடகொரியா மீதான தடைகளுக்கான குழுவிடம் தங்களது ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

 

அணுசக்தி சோதனைகள் அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், வடகொரியா அணுக்கரு பிளவு பொருட்களை உற்பத்தி செய்வதற்கான அதன் திறனை தொடர்ந்து வளர்த்துக்கொண்டுள்ளது. அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை உள்கட்டமைப்பை வடகொரியா தொடர்ந்து பராமரித்து மேம்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களுக்கான பொருட்கள், தொழில்நுட்பம், வெளிநாடுகளில் இருக்கும் இந்தத் திட்டங்களுக்கான அறிவு ஆகியவற்றை இணைய வழிகள் மற்றும் கூட்டு அறிவியல் ஆராய்ச்சி மூலம் வடகொரியா தொடர்ந்து தேடி வருகிறது. சைபர் தாக்குதல்கள் குறிப்பாக கிரிப்டோ சொத்துக்கள் மீது நடத்தப்படும் சைபர் தாக்குதல்கள், வடகொரியாவின் வருமானத்திற்கு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது.

 

2020 முதல் 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரையிலான காலகட்டத்தில், வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருந்து குறைந்தது மூன்று கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களிலிருந்து வடகொரியா சைபராக்டர்கள் (cyberactors) 50 மில்லியனுக்கும் அதிகமான டாலர்களை திருடியுள்ளனர் என உறுப்பு நாடுகளில் ஒன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு சுயாதீன தடைகள் கண்காணிப்பாளர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.