; India stops Indus River water flowing to Pakistan at Pahalgam incident

Advertisment

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து காஷ்மீருக்குச் சென்றசுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். பஹல்காம் பகுதியில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும், ராணுவப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையை மூடுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும், இந்தியாவிற்கு வர பாகிஸ்தான் நாட்டினருக்கு அனுமதி இல்லை எனவும், பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட எஸ்விஇஎஸ்(SVES) விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ஆம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்தியாவின் இந்த அதிரடி முடிவுகளால் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில்,பாகிஸ்தானுக்கு செல்லக்கூடிய சிந்து நதிநீரைதிறந்து விடுவதை இந்தியா நிறுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ராம்பன் எனும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாக்லிகார் அணையில் இருந்து நதிநீர் பாகிஸ்தானுக்கு சென்று வந்தது. அந்த நதிநீரை, பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை வழங்கப்படாது என்று மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது. இந்த நிலையில், ராம்பன் அணையின் மதகுகளை மூடி இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ளது.