ADVERTISEMENT

மேலும் 50 ஆயிரம் வீரர்களை சீன எல்லையில் குவித்தது இந்தியா!

11:05 AM Jun 29, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா மற்றும் சீன வீரர்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்தாண்டு மோதல் வெடித்தது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தார்கள். இந்த மோதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், நால்வர் மட்டுமே உயிரிழந்ததாக சீனா கூறியுள்ளது.

இந்த மோதலைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. படை விலகல் தொடர்பாகவும், படை குறைப்பு தொடர்பாகவும் இரு நாடுகளிடையே சில தீர்மானங்கள் எட்டப்பட்டன. அந்த தீர்மானங்கள் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.

இந்தநிலையில், மேலும் 50,000 வீரர்களை இந்தியா, சீனாவுடனான தனது எல்லையில் குவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே 2 லட்சம் இந்திய வீரர்கள் சீன எல்லையில் குவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிதாக குவிக்கப்பட்டுள்ள படைகளில், வீரர்களை ஓரு பள்ளத்தாக்கில் இருந்து இன்னொரு பள்ளத்தாக்கிற்கு எளிதில் கொண்டு செல்ல வசதியாக அதிக ஹெலிகாப்டர்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அந்த அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதுகுறித்து கருத்து கேட்க ஊடகங்கள் முயன்றபோதிலும் பிரதமர் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளரிடமிருந்தோ, இந்திய இராணுவத்திடமிருந்தோ எந்த பதிலும் வரவில்லை. இருப்பினும் அண்மைக்காலமாக சீனா எடுத்துவரும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தே கூடுதல் வீரர்களைக் குவித்ததாக கருதப்படுகிறது.

சீன இராணுவம் சமீபத்தில், திபெத்தில் இருந்து கூடுதல் படைகளை, சின்ஜியாங் இராணுவக் கட்டளை பிரிவுக்கு மாற்றியதை இந்தியா கண்டறிந்தது. சின்ஜியாங் இராணுவக் கட்டளை பிரிவே இமையமலையின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் ரோந்து மேற்கொள்ளும் பொறுப்பை வகிப்பதாகும். மேலும் எல்லையில் சீனா, புதிய ஓடுதள கட்டுமானங்கள், போர் விமானங்களை நிறுத்த வெடிகுண்டு தடுப்பு பதுங்கு குழிகள் ஆகியவற்றை ஏற்படுத்தி வருவதாகவும், நீண்ட தூர பீரங்கிகள், டாங்கிகள், ராக்கெட் ரெஜிமென்ட்கள் ஆகியவற்றை தனது எல்லையில் உள்ள படைகளோடு இணைத்துவருவதாகவும் கூறப்படுகிறது. இதனையொட்டியே இந்தியா கூடுதல் வீரர்களைக் குவித்திருப்பதாக கருதப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT