Skip to main content

டிசம்பர் முதல் ஆறு மாதங்களுக்கு மின்தட்டுப்பாட்டை சந்திக்க நேரலாம் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

Published on 26/10/2021 | Edited on 26/10/2021

 

nitin gadkari

 

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று (25.10.2021) ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது,

 

“பெட்ரோல் மற்றும் டீசலைவிட பசுமை ஹைட்ரஜன் சிறந்தது. கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, எத்தனால் மற்றும் பிற தூய்மையான, உள்நாட்டு எரிபொருட்களை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டுமாறு முதலீட்டாளர்களை வலியுறுத்துகிறேன். போக்குவரத்துத் துறை பெரிய மாற்றத்தை சந்தித்துவருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதியைச் சார்ந்திருக்காமல், எரிபொருளை ஏற்றுமதி செய்யும் ஒரு நாட்டை உருவாக்க விரும்புகிறோம்.

 

இந்தியா தற்போது டீசல் மற்றும் பெட்ரோல் இறக்குமதிக்காக கிட்டத்தட்ட ரூ. 8 லட்சம் கோடி செலவழிக்கிறது. இது அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 25 லட்சம் கோடியாக அதிகரிக்கலாம். பெட்ரோல் - டீசல் இறக்குமதி மூலம் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்யும் நாடுகளையும் நாம் பணக்காரர்களாக்குகிறோம். பெட்ரோல் - டீசல் இறக்குமதியைக் குறைப்பது நாடு சந்திக்கும் பல பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கும்.

 

அலுமினியம் மற்றும் தாமிரம் போன்ற உலோகங்கள் இந்தியாவில் ஏராளமாக இருந்தும், இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருப்பது துரதிர்ஷ்டவசமானது. பொருளாதாரமும் சுற்றுச்சூழலும் முக்கியமானது. சுற்றுச்சூழலையும் சூழலியலையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நிறுத்தப்படக்கூடாது.

 

மாநில அரசுகள் நடத்தும் மின் விநியோக நிறுவனங்களின் நிலை மோசமாக உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி துரிதப்படுத்தப்பட வாய்ப்பிருப்பதால், இந்தியாவிற்கு அதிக மின்சாரம் தேவைப்படலாம். எனவே, அநேகமாக டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மின் தட்டுப்பாடு பிரச்சனையைச் சந்திக்க நேரிடும்.”

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீயாய்ப் பரவிய செய்தி! மாற்றிய ஒன்றிய அமைச்சர்! 

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

The news spread wildly! Union Minister Changed statement

 

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 63ம் ஆண்டு கூட்டம் செப்டம்பர் 12 டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது நிதின் கட்கரி பேசுகையில், “டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க வேண்டும். இது தொடர்பாக இன்று(12-09-2023) மாலை நிதியமைச்சரிடம் கடிதம் கொடுக்க உள்ளேன். மேலும், டீசலுக்கு குட்பை சொல்லுங்கள். தயவு செய்து டீசல் கார்கள் தயாரிப்பை நிறுத்திவிடுங்கள். இல்லையென்றால், டீசல் கார்களை விற்பதற்கு சிரமமாகிவிடும் அளவுக்கு வரியை அதிகப்படுத்துவோம்” என பேசினார்.  

 

இவரின் பேச்சு சர்ச்சையாகி விமர்சனங்கள் எழத் தொடங்கியது. இந்த நிலையில், அமைச்சர் நிதின் கட்கரி தனது எக்ஸ் சமூகவலைத்தளப் பக்கத்தில், “டீசல் வாகனங்கள் விற்பனைக்கு கூடுதலாக 10% ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என ஊடகங்களில் செய்திகள் வருகிறது. இதனை உடனடியாக தெளிவுபடுத்த விரும்புகிறேன். அரசாங்கத்தின் பரிசீலனையில் தற்போது அத்தகைய முன்மொழிவு எதுவும் இல்லை. மேலும், 2070க்குள் கார்பன் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கும், டீசல் போன்ற அபாயகரமான எரிபொருட்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைப்பதற்கும், ஆட்டோமொபைல் விற்பனையில் விரைவான வளர்ச்சியை அடைய வேண்டும். இதற்கு ஏற்ப, தூய்மையான மற்றும் பசுமையான மாற்று எரிபொருளுக்கு தகவமைத்துக் கொள்வது அவசியம். அந்த வகையான மாற்று எரிபொருட்கள் இறக்குமதியில், எரிபொருட்களானது மாற்றுள்ளதாகவும், செலவில் குறைந்தும் இருக்க வேண்டும். இதனுடன், மாசில்லாததாகவும், சுதந்திரமாக இயங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் சி.ஏ.ஜி. அறிக்கை வெளியாகி, விரைவுச் சாலை போடுவதில் ஊழல் நடந்துள்ளது என விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், ஒன்றிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்ன விஷயத்தை மறுத்து அப்படியான திட்டம் எதுவும் இல்லை எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

Next Story

 இரவிலும் தொடரும் மின்வெட்டால் தூக்கமின்றித் தவிக்கும் பொதுமக்கள்..!

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

People suffering from sleepless nights due to power cuts in pudukkottai

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாலை 5 மணிக்குப் பிறகு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை, ஒரு மணி நேரம் மின்வெட்டு தொடர்ந்து நீடித்து வருவதால், நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பொதுமக்கள் தூக்கமின்றித் தவித்து வருகின்றனர்.

 

கடந்த சில மாதங்களாக விவசாயத்திற்கான நீர்மூழ்கி மோட்டார்களை இயக்க மும்முனை மின்சாரம் சில மணி நேரங்களே கிடைத்துவரும் நிலையில், தற்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரமும் துண்டிக்கப்பட்டு வருவதால், பெரும் வேதனையில் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் மின்சார வாரியத்திற்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.