Skip to main content

அருணாச்சல பிரதேச எல்லையில் கண்காணிப்பை மேம்படுத்திய இந்தியா!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

INDIA CHINA

 

இந்தியா - சீனா எல்லையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்று அருணாச்சல பிரதேஷ். இந்த மாநிலத்தைச் சீனா தன்னுடைய பகுதி என உரிமை கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் தற்போது அருணாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள மெய்யான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (line of actual control) இந்திய இராணுவம் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளது.

 

தற்போது இராணுவம் அப்பகுதியைக் கண்காணிக்க அதிநவீன ட்ரோன்களை களமிறக்கியுள்ளது. இந்த ட்ரோன்கள் 24 மணிநேரமும் கண்காணிப்பில் இருப்பதோடு, தேவையான படங்களை எடுத்து இராணுவத்துக்கும், கட்டுப்பாட்டு நிலையத்திற்கும் அனுப்பி வருகிறது. மேலும் இந்திய இராணுவம், ஆயுத அமைப்பு திறன் ஒருங்கிணைந்த ருத்ரா ஹெலிகாப்டரையும் எல்லை கண்காணிப்பிற்குப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. சீனா எதாவது ஆக்கிரமிப்பு முயற்சியை எடுத்தால், அதைத் தடுக்கவே கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

 

அண்மையில் லடாக்கில் படை விலகல் தொடர்பாக இந்தியா- சீனா இடையே நடைபெற்ற 13-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் செப்டம்பர் இறுதியில், அருணாச்சல் பிரதேசத்தில் சுமார் 200 சீன வீரர்களை இந்திய எல்லைக்கு மிக அருகில் இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதாகவும்,  சில மணிநேரம் இருநாட்டு இராணுவ வீரர்களும் உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே குவிந்திருந்ததாகவும், பின்னர் இருநாடுகளைச் சேர்ந்த எல்லைப்பகுதி இராணுவ தளபதிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாட்டு இராணுவ வீரர்களும் கலைந்து சென்றதாகவும் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sudden landslide in Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி திபெங் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள திபெங் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 33 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ரோயிங் - அனினி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவடடங்களில் இருந்து திபெங் மாவட்டம் தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படும் வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இந்த வழித்தடத்தில் பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.