
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நேற்று நள்ளிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமானது மட்டுமல்லாமல் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக நடத்திய இந்த தாக்குதலுக்கு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா நடத்திய தாக்குதலுக்கு குழந்தைகள், பெண்கள் என 10 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. எதிர்பாராதவிதமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜோரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில், 4 குழந்தைகள், 2 பெண்கள் உள்ளிட்ட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், 50 பேர் காயமடைந்துள்ளனர். பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து எல்லை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் திட்டத்தை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், சண்டிகர் உள்ளிட்ட 15 இந்திய நகரங்களை குறிவைத்து வான் பாதுகாப்பு ரேடார்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது. அந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக லாகூரில் இருந்த வான் பாதுகாப்பு ரேடார்களை, இந்திய ராணுவம் தகர்த்தியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.