Advertisment

பேச்சுவார்த்தையில் பிடிவாதம் பிடித்த சீனா - எல்லை பிரச்சனையை தீர்ப்பதில் சிக்கல்!

india china

இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஆண்டு மோதல் வெடித்தது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தார்கள். இந்த மோதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், நால்வர் மட்டுமே உயிரிழந்ததாக சீனா கூறியுள்ளது.இந்த மோதலைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகளில் படை விலக்கல் தொடர்பாகவும், படை குறைப்பு தொடர்பாகவும் இரு நாடுகளிடையே சில தீர்மானங்கள் எட்டப்பட்டு, அவை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

Advertisment

இந்தநிலையில், இந்தியா - சீனா இடையிலான 13வது கட்ட பேச்சுவார்த்தை, உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் சீன பகுதியில் மால்டோ என்னும் இடத்தில் நேற்று (10.10.2021) காலை 10.30 மணிக்குத் தொடங்கி இரவு ஏழு மணிவரை நடைபெற்றது. கிழக்கு லடாக்கில் மூன்று இடங்களில் படைகளை விலக்குவது குறித்து நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் சீன தரப்பின் பிடிவாதத்தால் எல்லை பிரச்சனையைத் தீர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலவும் தற்போதைய நிலைமை, சீனா ஒரு தலைபட்சமாக சூழ்நிலையை மாற்ற முயன்றதாலும், அது இருதரப்பு ஒப்பந்தங்களை மீறியதாலும் ஏற்பட்டது. எனவே மேற்குப் பகுதியில் அமைதியை மீட்டெடுக்க மீதமுள்ள பகுதிகளில் (படைகள் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளில்) சீன தரப்பு உரிய நடவடிக்கை எடுப்பது முக்கியம் என பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டது" என தெரிவித்துள்ளது.

"மீதமுள்ள பகுதிகளில் தீர்வு எட்டப்படுவது இருதரப்பு உறவுகளிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்" என பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டதாக அறிக்கையில் கூறியுள்ள இந்திய இராணுவம், "மீதமுள்ள பகுதிகளில் தீர்வை எட்டுவதற்கு இந்திய தரப்பு ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை செய்தது. ஆனால் சீன தரப்பு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சந்திப்பில் மீதமுள்ள பகுதிகளுக்குத் தீர்வு எட்டப்படவில்லை" எனவும் கூறியுள்ளது.

மேலும், "இரு தரப்பினரும் தகவல்தொடர்புகளைப் பராமரிக்கவும், களத்தில் ஸ்திரத்தன்மையைப் பராமரிக்கவும் ஒப்புக்கொண்டனர். இரு தரப்பு உறவின் பல்வேறு கோணங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வதோடு,இருதரப்பு உடன்படிக்கைகள் மற்றும் நெறிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து, மீதமுள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்க்க சீனா பணியாற்றும் என நாம் எதிர்பார்க்கிறோம்" எனவும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

அதேபோல் இந்தப் பேச்சுவார்த்தை குறித்து சீனா இராணுவத்தைச் சேர்ந்த வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்டின் (western theater command) செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா நியாயமற்ற, நடைமுறைப்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி, பேச்சுவார்த்தையைக் கடினமாக்குகிறது" என்றும், "நிலைமையைத் தவறாக மதிப்பிடுவதற்குப் பதிலாக, இந்திய - சீன எல்லையில் போராடி அமல்படுத்தப்பட்ட சூழ்நிலையை இந்திய தரப்பு எண்ணிப் பார்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இருதரப்பும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், எல்லை பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

border china India
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe