Skip to main content

எல்லையில் மேலும் ஒரு பகுதியில் படைகளை விலக்கிய இந்தியா - சீனா!

Published on 06/08/2021 | Edited on 06/08/2021

 

india -china

 

இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்தாண்டு மோதல் வெடித்தது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தார்கள். இந்த மோதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், நால்வர் மட்டுமே உயிரிழந்ததாக சீனா கூறியுள்ளது.

 

இந்த மோதலைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. படை விலக்கல் தொடர்பாகவும், படை குறைப்பு தொடர்பாகவும் இரு நாடுகளிடையே சில தீர்மானங்கள் எட்டப்பட்டன. அந்த தீர்மானங்கள் படிப்படியாக அமலுக்கு வருகின்றன.

 

இதன்தொடர்ச்சியாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி, இந்தியா மற்றும் சீனா இடையேயான 12வது கட்ட படைத்தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்தொடர்ச்சியாக லடாக்கின் கோக்ரா பகுதியிலிருந்து இரண்டு நாடுகளும் தங்களது படைகளை விலக்கியுள்ளன.

 

இந்த படைவிலகல் தொடர்பாக இந்திய இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

 

தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின்போது ஏற்பட்ட உடன்பாட்டின்படி, இரு தரப்பும் பிபி 17-ல் (கோக்ரா) படைகளை குவிப்பதை படிப்படியாக, ஒருங்கிணைந்த மற்றும் இருதரப்பாலும் சரிபார்க்கப்பட்ட முறையில் நிறுத்தின. ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் படை விலகல் நடைபெற்றது. இரு தரப்பும் தற்போது தத்தம் நிரந்தர தளத்தில் உள்ளன. இந்த (கோக்ரா) பகுதியில் இரண்டு தரப்பினராலும் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக கட்டமைப்புகளும் இதர துணை உள்கட்டமைப்புகளும் அகற்றப்பட்டு இரு தரப்பாலும் பரஸ்பரம் சரி பார்க்கப்பட்டன. இந்த பகுதியில் உள்ள நில அமைப்பு, மோதலுக்கு முன்பிருந்தபடி மாற்றப்பட்டது.

 

இந்தியா - சீனாவினிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம், இந்த பகுதியுள்ள உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டை இருதரப்பும் மதிக்கிறது என்பதையும், தற்போது நிலவி வரும் வரும் நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்ற எந்த தரப்பும் மாற்றாது என்பதையும் உறுதிப்படுத்துகிறது. இதன்மூலம் பிரச்சனையின் மேலும் ஒரு பகுதி தீர்க்கப்பட்டது. பேச்சுவார்த்தையை முன்னோக்கி எடுத்துச் செல்லவும், மேற்கு பகுதியில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் மீதமுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும் இரு தரப்பும் தங்களது உறுதியை வெளிப்படுத்தின. இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புபடையுடன் சேர்ந்து நாட்டின் இறையாண்மையை உறுதிப்படுத்தவும், உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அமைதியை பேணவும் இந்திய ராணுவம் உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்