India alliance trying to form a government and Suffocating BJP

ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (04-06-24) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. அதில், மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க வெறும் 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணி கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பதற்கான சூழல் நிலவுகிறது.

Advertisment

ஆந்திரப் பிரதேசத்தில் 16 மக்களவைத் தொகுதிகளை வென்ற தெலுங்கு தேசம் கட்சியும், பீகாரில் 12 மக்களவைத் தொகுதிகளை வென்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், பா.ஜ.க ஆட்சி அமைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும், தெலுங்கு தேசம் கட்சி முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த தேர்தலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக உள்ளார். அதனால், ஐக்கிய ஜனதா தளம் கட்சியையும், தெலுங்கு தேசம் கட்சியையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இந்தியா கூட்டணியினர் இறங்கியுள்ளதாக தகவல் வெளியானது. அந்த வகையில், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியைச் சேர்ந்த சரத்பவார், நேற்று தொலைப்பேசி மூலம் நிதிஷ்குமாரையும், சந்திரபாபு நாயுடுவையும் தொடர்பு கொண்டு பேசினார் என்று கூறப்பட்டது.

Advertisment

இதற்கிடையே, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது. அதில், இந்தியா கூட்டணியை உருவாக்கி, பின்னர் பா.ஜ.க கூட்டணியில் இணைந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தங்கள் பக்கம் வரவேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். மேலும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ், இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான அனைத்து முயற்சியையும் எடுப்போம் என்று கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆந்திராவில் முதல்வராக பதவியேற்கவிருக்கும் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.கவுடனான கூட்டணியை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் இந்த மக்களவைத் தேர்தலில் கிங் மேக்கராக சந்திரபாபு நாயுடு இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று மாலை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும், பா.ஜ.கவிடம் பல நிபந்தனை விதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பா.ஜ.க மத்தியில் ஆட்சி பெற்று இருந்தாலும் கூட்டணி கட்சியையே நம்பி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Advertisment