ADVERTISEMENT

வெஸ்ட் இண்டீஸை 257 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா! தொடரையும் வென்று சாதனை!!

07:55 AM Sep 03, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் இந்தியா, 2-0 கணக்கில் வென்று அசத்தியது.

ADVERTISEMENT

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், கிங்ஸ்டனில் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30ம் தொடங்கியது.


டாஸில் வென்ற வெஸ்ட் இண்டீஸ், இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் குவித்தது. 25 வயதான ஹனுமா விஹாரி இந்த போட்டியில் முதல் முறையாக சதம் அடித்து அசத்தினார். அவர் 111 ரன்கள் எடுத்தார். கேப்டன் விராட் கோஹ்லி 76 ரன்களும், இஷாந்த் ஷர்மா 57 ரன்களும் எடுத்தனர். இஷாந்த் ஷர்மாவும் டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக அரை சதம் அடித்து அசத்தினார்.


இதையடுத்து முதல் இன்னிங்ஸை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடும் குடைச்சலை ஏற்படுத்தினார். அவருடைய பந்து வீச்சில் விக்கெட்டுகள் சீட்டுக் கட்டுகள் போல் சரிந்தன. ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த பும்ரா, முதல் இன்னிங்சில் 6 விக்கெட் டுகளை வீழ்த்தினார். முகமது ஷமி 2 விக்கெட்டுகள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது.


இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்தியா 'ஃபாலோ ஆன்' வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 299 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கியது இந்தியா. நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டத்தை 'டிக்ளேர்' செய்தார் விராட் கோஹ்லி. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரஹானே 64 ரன்கள், ஹனுமா விஹாரி 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 468 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.


கடின இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நான்காம் நாளன்று மதிய உணவு இடைவேளை வரை கட்டுக்கோப்புடன் நிதானமாக விளையாடியது. உணவு இடைவேளைக்குப்பிறகு வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா மற்றும் சுழல்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கடுமையான குடைச்சலைக் கொடுத்தனர்.


ஒருகட்டத்தில் அந்த அணி, 210 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷர்மார் புரூக்ஸ் 50, கேப்டன் ஜேசன் ஹோல்டர் 39 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் இந்தியா அணி, வெஸ்ட் இண்டீஸை 257 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேலும், அந்த அணிக்கு எதிரான தொடரை 2-0 கணக்கிலும் வென்று அசத்தியது. வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா அதன் சொந்த மண்ணில் வாஷ்அவுட் செய்தது குறிப்பிடத்தக்கது.


முதல் இன்னிங்ஸில் 111, இரண்டாவது இன்னிங்ஸில் 53 ரன்களும் எடுத்த ஹனுமா விஹாரி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

துளிகள்:


* விராட் கோஹ்லி தலைமையில் இதுவரை 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 28 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. இதற்குமுன், தோனி தலைமையில் 60 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 27 ஆட்டங்களில் வென்றுள்ளதே சாதனையாக இருந்தது. அதை கோஹ்லி இப்போது முறியடித்து, வெற்றிகரமான டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதேபோல் கங்குலி தலைமையிலான இந்திய அணி 49 ஆட்டங்களில் மோதி, 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.


* வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி, ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 120 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு அடுத்த நிலையில் நியூஸிலாந்து 60, இலங்கை 60, ஆஸ்திரேலியா 32, இங்கிலாந்து 32 புள்ளிகள் பெற்றுள்ளன.


* வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டி&20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என அனைத்திலும் வெற்றி பெற்று, அந்த அணியை முற்றிலும் ஒயிட் வாஷ் செய்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.


* அடுத்தடுத்த இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 5 அல்லது அதற்குமேல் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்களில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராதான் மிகக்குறைந்த பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார். அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 121 ப ந்துகளை வீசி, முதல் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டும், இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டும் வீழ்த்தியிருக்கிறார். இதற்குமுன் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான மைக்கேல் ஹோல்டிங் 134 பந்துகளிலும் (1984), ஜேசன் ஹோல்டர் 139 பந்துகளிலும் (2018) இச்சாதனையை படைத்திரு க்கின்றனர்.


* கடந்த 2002ம் ஆண்டிலிருந்து தற்போதைய தொடர் வரை வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்தியா 8 டெஸ்ட் தொடர்களில் மோதியுள்ளது. அனைத்து தொடர்களிலும் இந்தியா வென்று சாதனை படைத்திருக்கிறது.


* 11வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராத்வைட்டை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் மொத்தம் 50 பேரை ஸ்டம்பிங் மற்றும் கேட்ச் முறைகளில் ஆட்டமிழக்கச் செய்து, சாதனை படைத்துள்ளார். இந்த மைல்கல்லை மிகக்குறைந்த போட்டிகளில் எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெயரெடுத்திருக்கிறார் ரிஷப் பன்ட். இந்த சாதனையை எட்ட தோனிக்கு 15 ஆட்டங்கள் தேவைப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT