Advertisment

ஹரியானா அரசியலில் திடீர் திருப்பம்; பா.ஜ.கவுக்கு கிடைத்த கூடுதல் பலம்!

independent MLA support bjp in haryana

Advertisment

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் அம்மாநிலத்தில் நேற்று (08.10.2024) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், பா.ஜ.க 48 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களை பெற்ற பா.ஜ.க, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. அம்மாநிலத்தில் முதல்வராக இருந்த நயாப் சிங் சைனி, இம்முறையும் ஆட்சி அமைப்பார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில், பா.ஜ.கவில் இருந்து பிரிந்து சென்று சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற 3 வேட்பாளர்கள், பா.ஜ.கவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். பா.ஜ.கவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவும், சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்காத காரணத்தினாலும், தேவேந்தர் கத்யான், ராஜேஷ் ஜூன் மற்றும் நாட்டின் மிகப்பெரிய பணக்காரப் பெண்ணான சாவித்ரி ஜிண்டால் ஆகியோர் பா.ஜ.கவில் இருந்து பிரிந்து சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டனர்.

இதில் தேவேந்தர் கத்யான், கனார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் குல்திப் ஷர்மாவை 35,209 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பகதூர்கர் தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ராஜேஷ் ஜூன், பா.ஜ.க வேட்பாளர் தினேஷ் கெளசிக்கை 41,999 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். பா.ஜ.கவின் குருஷேத்ரா தொகுதி எம்.பி நவீன் ஜிண்டாலின் தாயாரும், நாட்டின் மிகப்பெரிய பணக்கார பெண்ணுமான சாவித்ரி ஜிண்டால், சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்காத காரணத்தினால் பா.ஜ.கவை விட்டு ஹிசார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இதனால், பா.ஜ.க தலைமை, சாவித்ரி ஜிண்டாலை கட்சியில் இருந்து நீக்கியது.

Advertisment

இதையடுத்து, நேற்று வெளியான சட்டமன்றத் தேர்தல் முடிவில் சுயேட்சை வேட்பாளர் சாவித்ரி ஜிண்டால், 18,941 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராம் நிவாஸ் ராராவை தோற்கடித்தார். இந்த நிலையில், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மூன்று பேரும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பா.ஜ.க எம்.பி பிப்லப் குமார் தேப் ஆகியோரை சந்தித்து பா.ஜ.கவுக்கு ஆதரவு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஹரியானா பா.ஜ.க தலைவர் மோகன் லால் படோலி கூறுகையில், “மூன்று சுயேச்சை எம்.எல்.ஏக்களும், பாஜகவின் வெற்றியால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவர்கள் கட்சிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளனர். அவர்கள் டெல்லியில் பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார். இதன் மூலம், ஹரியானா சட்டப்பேரவைக்குள் பா.ஜ.கவுக்கு 51 எம்.எல்.ஏக்கள் கிடைக்கவுள்ளது.

haryana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe