Independent MLA joins BJP

Advertisment

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, இம்மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள், தற்போதே தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், மத்தியிலும்மாநிலங்களிலும் பல அரசியல் பிரமுகர்கள் பாஜகவில் சேருவதும், வேறு கட்சிக்கு மாறுவதுமாக உள்ளனர். அதேபோல் மேலும் சில மாநிலங்களில் சுயேச்சை எம்.எல்.ஏக்களைதங்களோடு இணைப்பதில் பாஜக தீவிரம் காட்டிவருகிறது.

அந்த வகையில் உத்தரகண்ட் மாநிலத்தில் சுயேச்சை எம்.எல்.ஏவான பிரீத்தம் சிங் பன்வார், ஆளும் பாஜகவில் புதன்கிழமை (08.09.2021) இணைந்தார். பன்வார், உத்தரகண்ட் மாநிலத்தில் அமைச்சரகாகவும் பதவி வகித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,இந்த நிகழ்வு அந்த மாநில அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி முன்னிலையில் பன்வார் பாஜகவில் இணைந்தார். உத்தரகண்ட் மாநில பாஜக தலைவர் மதன் கொளசிக் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பன்வார் சிங் இப்போது தனோல்தி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கட்சித் தலைமை எனக்கு அளிக்கும் பொறுப்பில் திறம்பட செயல்படுவேன்” என்று கூறினார்.