Increase in number of suspended MPs in Parliament

நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து வந்ததால், இந்த இரு அவைகளிலும் எந்த ஒரு விவாதமும் நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து, இதுவரை மொத்தமாக இந்த கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்திருந்தது.

Advertisment

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.கே. சுரேஷ், நகுல்நாத் மற்றும் தீபக் பைஜ் ஆகியோர் இன்று மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதன் மூலம் நாடாளுமன்றத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை தற்போது 146 ஆக உயர்ந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்ற வரலாற்றிலேயே இவ்வளவு எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை. இதுவே முதல்முறை ஆகும்.