ADVERTISEMENT

ஒரு கொலையை மறைக்க ஒன்பது கொலைகள்! -‘முறையற்ற காதல்’ குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!

11:44 PM Oct 28, 2020 | kalaimohan

ADVERTISEMENT

தெலங்கானா மாநிலம் - வாரங்கல் மாவட்டம் - கோரிகுண்டா கிராமத்தில் உள்ள சணல் தொழிற்சாலையில் உள்ள கிணற்றில், கடந்த மார்ச் மாதம் 9 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மசூத், அவரது மனைவி நிஷா ஆகியோர், குடும்பத்தினருடன் கடந்த 20 ஆண்டுகளாக வாரங்கல் - கீர்த்தி நகரில் உள்ள கோணிப்பை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். அப்போது பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவருடன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், நிஷாவின் உறவினர் ரபிகா என்பவர், மேற்குவங்கத்தில் இருந்து தனது 16 வயது மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் பிழைப்பு தேடி அங்கு வந்தார்.

வாரங்கல்லில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த ரபிகா, சஞ்சய் குமாருக்கு சமையல் செய்து கொடுத்து, அதற்கான பணத்தைப் பெற்று வந்தார். அவ்வாறு ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், மூன்று பிள்ளைகளுடன் ரபிகா, சஞ்சய்குமாருடன் திருமணம் செய்துகொள்ளாமல், குடும்பம் நடத்தத் தொடங்கினார். இந்நிலையில், ரபிகாவின் வயதுக்கு வந்த மகளுடன் சஞ்சய்குமாருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கவனித்த ரபிகா, தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, தற்பொழுது தனது மகளுடன் நெருங்கிப் பழகுவது முறையானது அல்ல என எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT


இதையடுத்து, தனது காதலுக்கு இடையூறாக உள்ள ரபிகாவை கொலை செய்ய திட்டமிட்டான். கடந்த மார்ச் 7- ஆம் தேதி, ரபிகாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, மேற்கு வங்கத்திற்கு ரயிலில் அழைத்துச் சென்ற சஞ்சய் குமார், மோரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, இரவில் ரபிகாவைத் தூங்கவைத்து, அதிகாலை 3 மணியளவில் ராஜமகேந்திரவரம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, ரபிகாவின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து, ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டான். அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி, மற்றொரு ரயிலில் மீண்டும் வாரங்கல்லுக்கு வந்தான்.

இந்நிலையில் சஞ்சய்குமாரிடம், ரபீகா எங்கே என நிஷா கேட்டுள்ளார். இதற்கு சஞ்சய்குமார், பீகாரில் உள்ள தனது வீட்டிற்கு ரபிகாவை அனுப்பி வைத்திருப்பதாகக் கூறி சமாளித்துள்ளான். சஞ்சய்குமாரின் பேச்சில் நம்பிக்கை இல்லாமல், உண்மையைக் கூறாவிட்டால் போலீசில் புகார் அளிப்பேன் என நிஷா எச்சரித்துள்ளார்.இதனால், ரபிகாவை தான் அழைத்து சென்ற விவரம் தெரிந்த மசூத் - நிஷா குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரையும் மொத்தமாகக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளான், சஞ்சய்குமார்.

அதன்படி, மசூதின் பெரிய மகனுக்கு மார்ச் 21-ல் பிறந்த நாள் பார்ட்டி நடத்தப்படுவதை முன் கூட்டியே தெரிந்து கொண்டு, அதில் பங்கேற்பதற்காகச் சென்ற சஞ்சய்குமார், ஏற்கனவே திட்டமிட்டபடி, தூக்க மாத்திரைகளைக் கையுடன் எடுத்துச்சென்று, குளிர்பானத்தில் கலந்து அனைவருக்கும் கொடுத்துள்ளான்.


பார்ட்டியில் அங்கு பணிபுரியும் பீகாரைச் சேர்ந்த மற்ற 3 இளைஞர்களும் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கும் தூக்க மருந்து கலந்த குளிர்பானத்தை வழங்கியுள்ளான்.இரவு 12.30 மணியளவில், அனைவரும் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த நிலையில், தனியாளாக ஒவ்வொரு நபரையும் கோணிப் பையில் வைத்துக் கட்டி, அருகில் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு, சஞ்சய்குமார் கொலை செய்துள்ளான். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, சஞ்சய்குமாரை கைது செய்யப்பட்டான். மேலும், ரபிகா கொலை செய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து, தாடேப்பள்ளி ரயில்வே போலீசார், சஞ்சய்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.

முறையற்ற ஒரு காதலுக்காக, மொத்தமாக 10 பேர் உயிரை காவுவாங்கிய கொடூரன் சஞ்சய்குமாருக்கு, வாரங்கல் விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT