Incident happened on A young woman preparing for marriage in madhya pradesh

மத்தியப் பிரதேச மாநிலம், டாடியா பகுதியைச் சேர்ந்தவர் காஜல் அஹிர்வார்(22). இவருக்கும், இளைஞர் ஒருவருக்கு நேற்று (23-06-24) திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மணப்பெண்ணான காஜல் திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு மேக்கப் போடுவதற்காக உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சியில் உள்ள அழகு நிலையத்திற்கு தனது சகோதரியுடன் வந்தார். மேலும், அந்த அழகு நிலையத்திற்கு உள்ளே சென்று காஜல் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகத்தில் முகமூடி அணிந்து வெளியே நின்று கொண்டு, காஜலிடம் வெளியே வருமாறு கூறியுள்ளார். ஆனால், அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், அந்த நபர், ‘வெளியே வா காஜல், நீ எனக்கு துரோகம் செய்துவிட்டாய்’ என்று கூறியதாக கூறப்படுகிறது.

ஆனாலும், அந்த பெண் வெளியே வர மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு காஜலை சரமாரியாக சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த காஜல் மயங்கி கீழே விழுந்தார். இதனிடையே, காஜலை துப்பாக்கியால் சுட்ட அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த காஜலின் சகோதரி, காஜலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், காஜல் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத்தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், இளம்பெண்ணை சுட்டுக்கொலை செய்தவர் தீபக். அந்தப் பெண் வசிக்கும் அதே ஊரில்தான் அவரும் வசித்து வந்துள்ளார். தீபக்கும், காஜலும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, காஜலுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த தீபக், காஜலை சுட்டுக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இளம்பெண்ணை சுட்டுக் கொன்ற தீபக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருமணம் நடைபெறுவதற்கு முன்பு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.