Incident happened to Tribal women in odisha

ஒடிசா மாநிலம், பலங்கீர் மாவட்டத்தில் உள்ள ஜூராபந்த் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம்பெண். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இவருடைய விவசாய நிலத்தில், அபய் பாக் எனும் வேறு சமூகத்தைச் சேர்ந்த நபர், டிராக்டரை ஓட்டிச் சென்று பயிர்களை சேதப்படுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து, இளம்பெண்ணும், அவரது உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

தனக்கு எதிராக போராட்டம் நடத்தியதால், இளம்பெண் மீது அபய் பாக் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி அன்று அந்த இளம்பெண் ஊரில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அபய் பாக், அவரை கடுமையாக தாக்கியுள்ளார். அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி சாதிய வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த பெண்ணின் தாயாரையும், அபய் பாக் கழுத்தை நெரிக்க முயன்று கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், மனித கழிவுகளை எடுத்து இளம்பெண்ணின் முகம் முழுவதும் பூசி வலுக்கட்டாயமாக வாயிலும் திணித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

இதனை தொடர்ந்து, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண், பாங்கோமுண்டா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் அபய் பாக்கை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்று பழங்குடியின அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பழங்குடியின இளம்பெண் மீது நடத்தப்பட்ட சாதிய வன்முறை தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.