/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/arrestn_2.jpg)
மத்தியப் பிரதேசம் மாநிலம், போபால் நகரைச் சேர்ந்தவர் சுராஜ் பிரஜபதி. இவர், தனது மகன் சந்தீப் பிரஜபதியை காணவில்லை என்று கடந்தாண்டு டிசம்பர் 3ஆம் தேதி போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையில், சகோதரனை விடுவிக்க ரூ.1 லட்சம் பணம் வேண்டும் என சந்தீப் பிரஜபதியின் சகோதரி வந்தனாவுக்கு, அவகேஷ் என்பவரிடம் இருந்து மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. இந்த அழைப்பின் உரையாடலைப் பதிவு செய்த வந்தனா, அதை காவல்துறைக்கு அனுப்பினார். சுராஜ் பிரஜபதி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மிரட்டல் விடுத்த அவகேஷ், சந்தீப்பின் நண்பர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சந்தீப்பை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
ஆனால் நான்கு நாட்களுக்குப் பிறகு, செஹோர் மாவட்டத்தில் உள்ள டெலாவடி காட்டில் இருந்து சந்தீப்பின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட அவகேஷை பிடிக்க போலீஸ், குழு ஒன்று அமைத்தது. மேலும், அவகேஷ் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.30,000 பணம் சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீஸ் அறிவித்தது. இரண்டு மாத விசாரணைக்குப் பிறகு, அவகேஷ் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். ஹைதராபாத்தில் போலி அடையாளத்தோடு லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்த அவகேஷை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவகேஷின் உண்மையான பெயர் விகாஷ் ஜெய்ஸ்வால் என்றும், ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு அடையாளங்களோடு வாழ்ந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. விகாஷ் ஜெய்ஸ்வால், தனது நண்பர் சந்தீப்பின் சகோதரி வந்தனாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சந்தீப் மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த விகாஷ், தனது கூட்டாளிகளான உத்கர்ஷ் சவுத்ரி மற்றும் ஆதர்ஷ் சவுத்ரி ஆகியோரின் உதவியுடன், சந்தீப்பை கடத்தில் காட்டில் வைத்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர், போலீஸை மடைமாற்றுவதற்காக பணம் கேட்டு மிரட்டியுள்ளனர் என்பது தெரியவந்தது.
விகாஷ், ஏற்கெனவே ஐந்து முறை திருமணம் செய்துள்ளார் என்பதும், வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்ற செய்தியும் போலீசாரை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த வழக்கு குறித்து கூடுதல் தகவல்களை சேகரிக்க விகாஷின் மனைவிகளிடம் விசாரணை நடத்த போலீசார் தயாராகி வருவதாகத்தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)