/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siren-ni_31.jpg)
உத்தரப்பிரதேசம் மாநிலம், நைத்துவா கிராமத்தைச் சேர்ந்தவர் முனீஸ் சக்சேனா. இவருக்கு ஷானோ என்ற பெண்ணுடன் திருமணமாகி, 8 மற்றும் 5 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். முனீஸ் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்.
அதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று (07-03-24) இரவு முனீஸ் வழக்கம் போல், மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மது போதையில் வீடு திரும்பிய முனீஸுக்கும் அவரது மனைவி ஷானோவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, முனீஸ் தனது வீட்டிலேயே மது குடித்துள்ளார். அப்போது, அவர் வீட்டில் குடிப்பதை ஷானோ தடுக்க முயன்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த முனீஸ், தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து வந்து மனைவி ஷானோ மீது ஊற்றித் தீ வைத்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஷானோவின் மாமியார் முன்னி தேவி, ஷானோவை காப்பாற்ற முயன்றபோது அவருக்குத் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அங்கு வந்து ஷானோ மீது ஏற்பட்டிருந்த தீயை அணைத்தனர். இருப்பினும், ஷானோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஷானோவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஷானோவை காப்பாற்ற முயன்றதில் தீக்காயம் அடைந்த மாமியாரை மீட்டு மேல்சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, தலைமறைவாகியுள்ள முனீஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மது அருந்துவதைத் தடுக்க முயன்ற மனைவி மீது கணவன் தீ வைத்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)