
5 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி வீட்டிற்கு நுழைந்து கணவனை தாக்கி மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், பிலிபிட் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயது விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். இந்த நிலையில், கடந்த ஜனவரி 17ஆம் தேதி இரவு விவசாயியின் வீட்டிற்குள் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அத்துமீறி உள்ளே நுழைந்தனர். மேலும், விவசாயியைக் கொடூரமாகத் தாக்கினர். தடுக்க வந்த அவரது மனைவியின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கி கணவன் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட தம்பதி தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் அளிக்க அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். ஆனால், அவர்களின் புகாரைப் பதிவு செய்யாமல், பாதிக்கப்பட்ட தம்பதியினர் மீதே லஞ்சம் கொடுத்ததாகக் கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அந்த தம்பதியை 24 மணி நேரம் காவலில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட விவசாயி, ‘குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறை சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டோம். நாங்கள் மோசமாக காயமடைந்ததைக் கண்ட பிறகும், அவர்கள் எங்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவில்லை. பின்னர் நாங்களே பரிசோதனைகளுக்குச் சென்றோம். அறிக்கைகள் பல காயங்கள் இருப்பதைக் காட்டின. சிடி ஸ்கேன் அறிக்கையில் எனக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை’ என்று கூறினார்.
இந்த செய்தி, ஊடகம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு கடந்த 9ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, முக்கிய குற்றவாளியான பர்ஜீத் சிங் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.