குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள சவுக் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் பர்மர்(40). இந்த நிலையில், முகேஷ் தனது இளைய மகள் ஹெடாலியை(18) கொலை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த ஹெடாலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஆட்டோ டிரைவரான முகேஷ் பர்மருக்கு திருமணமாகி 2 மகள்கள், 2 மகள்கள் இருந்தனர். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் முகேஷ் ஆட்டோ ஓட்டாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில், முகேஷுக்கு உணவு சமைத்துக் கொடுக்கும்படி ஹெடாலியிடம் கூறிவிட்டு அவரது தாய் வேலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால், சமையல் செய்யாமல் ஹெடாலி மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். சமைத்து கொடுக்காமல் மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்த முகேஷ், ஹெடாலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதும், ஆத்திரமடைந்த முகேஷ், சமையில் அறையில் இருந்த குக்கரை எடுத்து ஹெடாலியின் தலை மற்றும் முகத்தில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த ஹெடாலி, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, முகேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமையல் செய்யாததால், பெற்ற மகளையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.