/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siren-ni_68.jpg)
கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் திவ்யஸ்ரீ(35). இவர், சந்தேரா காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு, ராஜேஷ்(40) என்பவருடன் திருமணமாகி 8 வயதில் மகள் உள்ளார். திவ்யஸ்ரீக்கு, ராஜேஷ்க்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இவர்கள் இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பான வழக்கு கேரள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தது. விசாரணை முடிந்த பிறகு திவ்யஸ்ரீ, தான் வசித்து வரும் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து, நேற்று மாலை நேரத்தில் மனைவி வீட்டுக்கு வந்த ராஜேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திவ்யஸ்ரீயை சரமாரியாக குத்தினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த திவ்யஸ்ரீயின் தந்தை, ராஜேஷை தடுக்க முயன்றார். அப்போது, திவ்யஸ்ரீயின் தந்தையையும் ராஜேஷ் வெட்டினார். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர், அங்கு வருவதற்குள் ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த திவ்யஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், திவ்யஸ்ரீ ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த திவ்யஸ்ரீயின் தந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது . அதன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ராஜேஷை பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் போலீஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)