Incident happened to daughter's by her father for opposition lover

மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனு குர்ஜார் என்ற 20 வயதுப் பெண். இவருக்கு வரும் பிப்ரவரி 18ஆம் தேதி பெற்றோர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் வேறு ஒரு நபருடன் காதல் கொண்ட தனு குர்ஜார், இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதையும் மீறி, திருமண ஏற்பாடு செய்து விருந்தினர்களுக்கு அழைப்பிதழ்களை அவரது பெற்றோர் வழங்கியுள்ளனர்.

இதற்கிடையில், தனது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பதாகவும், கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் போலீசாருக்கு வீடியோ மூலம் பேசி அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில் அவர், ‘ஆறு வருடங்களாக நான் ஒரு நபரை காதலித்து வந்தேன். ஆரம்பத்தில், எங்கள் திருமணத்திற்கு எனது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர். ஆனால் பின்னர், எனது தந்தை மகேந்திர குர்ஜர் மற்றும் பிற உறவினர்கள் அதை மறுத்துவிட்டனர். அவர்கள் என்னைத் தாக்கி, என்னைக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டுகிறார்கள். எனக்கு ஏதேனும் நடந்தாலோ அல்லது நான் இறந்தாலோ எனது குடும்பம் தான் அதற்கு முழு பொறுப்பு’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோவை தொடர்ந்து போலீசார் குழு, விசாரணை நடத்தி கோல் கா மந்திர் பகுதிக்கு இப்பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்பாக அவர்களுக்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி, நேற்று இந்த பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின் போது, மகள் தனு குர்ஜாருடன் தனியாக பேச அனுமதிக்குமாறு மகேந்திர குர்ஜார் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, தனுவை தனது வீட்டிற்குள் இருந்த அழைத்துச் சென்று துப்பாக்கியால் மகேந்திர குர்ஜார் சுட்டுக் கொன்றார். மேலும், தனு குர்ஜாரின் உறவினர் ஒருவரான ராகுல் குர்ஜர் என்பவரும் அவர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

Advertisment

இதையடுத்து, கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மகேந்திர குர்ஜாரை போலீசார் கைது செய்தனர். தப்பிச் சென்ற ராகுலை கண்டுபிடிக்க ஒரு குழு அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மகளுக்கு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.