/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/policeforeignn_5.jpg)
கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க சார்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரக்ஷா காட்சே. இவருக்கு, மத்திய பா.ஜ.க அரசு ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை வழங்கியது. அதன்படி, ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை பெண் அமைச்சராக ரக்ஷா காட்சே பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், இவர் ஜல்காவ் முக்தாய் நகர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ‘மகாராஷ்டிராவின் ஜல்கானில் நடந்த சந்த் முக்தாய் யாத்திரையில் எனது மகள் மற்றும் அவரது தோழிகள் கலந்து கொண்டனர். அப்போது சில இளைஞர்கள், அவர்களை பின் தொடர்ந்து போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். இதற்கு எனது ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தடன், அந்த வாலிபர்கள் தவறாக நடந்து கொண்டுள்ளனர். மேலும், எனது பாதுகாப்பு ஊழியர்களின் சட்டை காலரைப் பிடித்து மிரட்டியுள்ளனர். இதே கும்பல், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியன்று நடந்த நிகழ்ச்சியில், எனது மகள் மற்றும் அவரது தோழிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து, மத்திய அமைச்சர் ரக்ஷா காட்சே மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்தார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரக்ஷா காட்சே, “ஒவ்வொரு வருடமும் மகாசிவராத்திரியின் போது இந்தப் பகுதியில் சாந்த் முக்தாய் யாத்திரை நடைபெறுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு, என் மகள் யாத்திரைக்குச் சென்றாள். சில இளைஞர்கள் அவளைத் துன்புறுத்தினர். அவர்கள் மீது புகார் அளிக்க நான் காவல் நிலையத்திற்குச் சென்றேன். குற்றம் சாட்டபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எனக்கு உறுதியளித்துள்ளார். பள்ளிக்குச் செல்லும் வழியில் இந்த நபர்கள் தங்களைத் துன்புறுத்துவதாக பல பள்ளி மாணவிகள் கூறுகின்றனர். நான் அவர்களிடம் நேரடியாக என்னிடம் வந்து போலீசில் புகார் அளிக்கச் சொன்னேன்” என்று கூறினார்.
இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனிகேத் கூய், பியூஷ் மோரே, சாஹம் கோலி, அனுஜ் பாட்டீல், கிரண் மாலி மற்றும் சச்சின் பால்வி ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அதில் ஒருவரை கைது செய்து மீதமுள்ள 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)