The incident of dragging the lover's mother in a procession in karnataka

கர்நாடகா மாநிலம், பெலகாவி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் துண்டப்பா (24). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பிரியங்கா (19) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் பிரியங்காவின் பெற்றோருக்கு தெரியவந்தது.துண்டப்பாவும், பிரியங்காவும் ஒரே சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், பிரியங்காவின் பெற்றோர் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அந்த பெண் துண்டப்பாவை தொடர்ந்து காதலித்து வந்தார்.

Advertisment

இந்த நிலையில், பெண்ணின் வீட்டார் அவசர அவசரமாக வேறொரு இளைஞரோடு அந்த பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடு செய்ய தொடங்கினர். இதனால், காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, நேற்று முன்தினம் (10-12-23) வீட்டை விட்டு வெளியேறினர். துண்டப்பாவும், பிரியங்காவும் ஒன்றாக சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அந்த கிராமம் முழுக்க பரவியது.

Advertisment

இதனால், ஆத்திரமடைந்த பிரியங்காவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், துண்டப்பா வீட்டுக்கு சென்று கற்களை வீசி தாக்கினர். மேலும், அவர்கள் துண்டப்பாவின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து துவம்சம் செய்தனர். அதன் பின்னர், வீட்டில் இருந்த துண்டப்பாவின் 42 வயது தாயை வெளியே இழுத்துச் சென்று நிர்வாணமாக்கி கிராமத்து தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகும், ஆத்திரம் அடங்காத அவர்கள், அந்த பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் நடத்தியதில் துண்டப்பாவின் தாய் பலத்த காயமடைந்தார். இந்த கொடூரச் சம்பவத்தை கண்ட அங்கிருந்த சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த பெலகாவி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள், அந்த பெண்ணை தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதனை தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் அந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு, பிரியங்காவின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment