Skip to main content

இந்திய அரசு இல்லையென்றால் வேறு யார்? - பெகாசஸ் விவகாரம் குறித்து சுப்பிரமணியன் சுவாமி கேள்வி! 

 

subramanian swamy

 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுகேட்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இருவர், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் தொலைபேசி எண்கள் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டன அல்லது ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என இந்த பெகாசஸ் ஹேக்கிங் குறித்து 'பெகாசஸ் ப்ராஜெக்ட்' என்ற பெயரில் ஆய்வு செய்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

 

இது பெரும் சர்ச்சையானது. இந்தியாவில் நாடாளுமன்றத்திலும் பெகாசஸ் விவகாரம் எதிரொலித்தது. இதனையடுத்து இதுகுறித்து மக்களவை விளக்கமளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெகாசஸ் மூலம் யாரும் உளவு பார்க்கப்படவில்லை என தெரிவித்தார். இருப்பினும் இதனை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன்பிறகு நடந்த அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தப் பெகாசஸ் விவகாரத்தை இன்றும் (20.07.2021) நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 

 

இந்தநிலையில் பாஜகவின் மாநிலங்களவை எம்.பி சுப்ரமணியன் சுவாமி, பெகாசஸை மத்திய அரசு பயன்படுத்தவில்லை என்றால் வேறு யார் என கேள்வியெழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "பெகாசஸ் ஸ்பைவேர், கட்டண ஒப்பந்தங்களில் பணியாற்றும் ஒரு வணிக நிறுவனம் என்பது தெளிவாக உள்ளது. அவர்களது இந்திய ஆப்ரேஷன்களுக்கு (operation) யார் பணம் அளித்தது என்ற தவிர்க்க முடியாத கேள்வி எழுகிறது. அது இந்திய அரசு இல்லையென்றால் வேறு யார்? அதை மக்களுக்கு சொல்வது மோடி அரசின் கடமை" என தெரிவித்துள்ளார். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !