ADVERTISEMENT

"36 மாவட்டங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்" - ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை...

05:36 PM Apr 10, 2020 | kirubahar@nakk…

இந்தியா முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 36 மாவட்டங்களில், கரோனா கட்டுப்பாட்டில் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என ஐ.சி.எம்.ஆர் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

/

உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.6 லட்சம் என்ற அளவிலும் உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95,000 ஐ கடந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால் 6000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கரோனா பரவல் குறித்து கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை ஐ.சி.எம். ஆர் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் இதழில் ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை நாடு முழுவதும் கடுமையான சுவாசக் கோளாறு தொற்று (SARI) உடைய 5911 பேருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டதில், 104 பேருக்கு கரோனா இருப்பதாக தெரியவந்துள்ளது. இதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை, கரோனா நோயாளிகளுடன் நேரடித் தொடர்பிலும் இருந்திருக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே கடுமையான சுவாசக் கோளாறு தொற்று (SARI) இருப்பவர்களை கரோனா தாக்குவதற்கு வாய்ப்பு அதிகமிருப்பதாக கணிக்கப்படுகிறது.

ADVERTISEMENT



நாடு முழுவதும் இந்த கடுமையான சுவாசக் கோளாறு தொற்று (SARI) இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள மாவட்டங்களாக 36 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆய்வின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 965 SARI நோயாளிகளின் மாதிரிகள் பிப்ரவரி 15-29 மற்றும் மார்ச் 19, 2020 க்கு இடையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, இரண்டு பேருக்கு மட்டுமே கரோனா இருந்துள்ளது. இருப்பினும், அனைத்து SARI நோயாளிகளையும் சோதித்துப்பார்ப்பதற்கு பரிசோதனை விரிவாக்கப்பட்டபோது, மொத்தம் 4,946 மாதிரிகளில் 102 (2.1%) பேருக்கு கரோனா கண்டறியப்பட்டது.

"ஆரம்ப வாரங்களில் பூஜ்ஜியத்திலிருந்த கரோனா பாதிப்பு சதவீதம் 14 வது வாரத்தில் 2.6% வரை அதிகரித்தது," என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 8 மாவட்டங்களிலும், மேற்கு வங்கத்தில் 6 மாவட்டங்களிலும், தமிழகம் மற்றும் டெல்லியில் தலா 5 மாவட்டங்களிலும் இந்த SARI பாதிப்பு உடைய நபர்கள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த மாவட்டங்கள் உட்பட நாட்டின் 36 மாவட்டங்களில் கரோனா பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என ஐ.சி.எம்.ஏர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT