இந்திய கிங் பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் சுமார் ரூபாய் 9,000 கோடி வரை கடனை பெற்றுக்கொண்டு, கடனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டிற்கு தப்பித்து சென்று விட்டார். இது தொடர்பாக மத்திய அரசு மத்திய அமலாக்கத்துறை மூலம் சர்வதேச அமைப்பான இன்டர்போல் உதவியுடன் விஜய்மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வரும் நடவடிக்கையில் தீவீரமாக ஈடுபட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக லண்டன் நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு தற்போதுவிசாரணையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று உலக கோப்பை தொடருக்கான போட்டியில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் லண்டன் ஓவல் மைதானத்தில் மோதின. இந்த தொடரை காண இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையா ஓவல் மைதானம் வந்திருந்தார். அங்கிருந்த இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் “சோர் ஹே” அதாவது இவன் ஒரு திருடன் என்று கத்தி கோஷமிட்டனர். இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேட்டி கொடுத்த விஜய் மல்லையா, “விளையாட்டை பார்க்கவே வந்தேன்” என்று கூறியவர். “ஜூலையில் விசாரணைக்காக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட வீடியோ காட்சி ஒன்றில் இந்தியர்கள் ஒரு குழுவாக இணைந்து விஜய் மல்லையாவை “இவன் ஒரு திருடன்” என்று கூறி கோஷமிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் “ மனிதனாக இருங்கள், உங்கள் நாட்டிடம் மன்னிப்பு கேளுங்கள்” என்று மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனை விஜய் மல்லையா கேட்காதது போல் கடந்து சென்று விட்டார். இந்த எதிர்ப்பு முதன் முறையல்ல. 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லண்டனில் நடந்த இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா போட்டியின் போதும் “திருடன், திருடன்” என்று மக்கள் கத்தி கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.