I pay my respects to the makers of the political charter President 

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (31.01.2025) காலை 11 மணிக்குத் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதற்காக நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார்.

Advertisment

இதனையடுத்து நாளை (01.02.2025) மத்திய அரசின் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். முன்னதாக பாரம்பரிய முறைப்படி, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து சாரட் வண்டியில் நாடாளுமன்றத்திற்கு வருகை வந்த குடியரசுத் தலைவரைப் பிரதமர் மோடி, துணைக் குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தங்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வரவேற்றனர். மேலும், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு நாடாளுமன்ற ஊழியர்கள் செங்கோலை ஏந்தியபடி வரவேற்பு அளித்தனர்.

Advertisment

இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பேசுகையில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். கும்பமேளாவில் கூட்ட நெரிசல் காரணமாக இறந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்கிறேன். இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக 41 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சிறப்பாகச் செயல்படுத்துகிறது. 2.25 கோடி சொத்து உரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய கொள்கை முடிவுகள் விரைவான வேகத்தில் அரசால் நிறைவேற்றப்படுகின்றன” எனப் பேசினார்.