'I have the right to express people's concerns' - Rahul Gandhi letter

நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு, அக்னி வீரர் திட்டம், பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து ராகுல்காந்தி பாஜகவுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். அதேபோல் பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல. உண்மையான இந்துக்கள் வெறுப்பு, வன்மம் ஆகியவற்றை தூண்ட மாட்டார்கள். ஆனால் பாஜகவினர் வெறுப்பை விதைக்கிறார்கள். 24 மணி நேரமும் பாஜகவினர் வெறுப்பை விதைத்து வருகின்றனர். பாஜகவும், பிரதமர் மோடியும் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல' என பல்வேறு குற்றச்சாட்டுகளை சாரம்சமாக வைத்து ராகுல் காந்தி உரையாற்றியிருந்தார். அதேநேரம் இந்துக்கள் குறித்த பேச்சுக்கு ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்திய பாஜக எம்பிக்கள், ராகுலின் கேள்விகளுக்கு பதிலளித்ததோடு கண்டங்களையும் தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

இப்படி காரசாரமான விவாதங்கள், பதில்கள் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்ததால் என்றும் இல்லாத அளவுக்கு நள்ளிரவு வரை மக்களவையில் விவாதம் நடைபெற்றது. இன்று நடைபெறும் நிகழ்வில் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று பிற்பகலுக்குப் பிறகு உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்துக்கள் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் பேசிய சில பகுதிகள் அவைக்குறிப்பில் இடம் பெறவில்லை. அதேபோல் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகியவை குறித்து ராகுல் முன்வைத்த விமர்சனங்களும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்குஎதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'எனது உரையிலிருந்து சில பகுதிகளில் நீக்கியது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது. மக்கள் பிரச்சனைகளை அவையில் எழுப்ப வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களின் கடமை. எனவே மக்களுடைய கவலைகளை அவையில் தெரிவிக்கும் உரிமை எனக்கு உள்ளது. ஆகவே எனது உரையில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் அவைக்குறிப்பில் சேர்க்க வேண்டும்' என வலியுறுத்தி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.