husband's recovered after couple who went to Meghalaya for honeymoon go missing

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்தவர் ராஜா ரகுவன்ஷி (29). போக்குவரத்து தொழிலதிபரான இவருக்கு, கடந்த மே 11ஆம் தேதி சோனம் என்பவருடன் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர், தேனிலவுக்காக இளம் தம்பதி இருவரும் கடந்த மே 20ஆம் தேதி மேகாலயாவுக்குச் சென்றனர். குவஹாத்தி வழியாக ஷில்லாங்கிற்கு பயணம் செய்த இந்த ஜோடி, சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள சோஹ்ராவை (சிரபுஞ்சி) பார்வையிட இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்தனர்.

ஷில்லாங்கிற்கு வருவதற்கு முன்பு அவர்கள் குவஹாத்தியில் உள்ள மா காமாக்யா கோயிலுக்குச் சென்றனர். மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள நோங்ரியாட் கிராமத்தில் உள்ள தங்கியிருந்த இளம் ஜோடி, மே 23 அன்று காணாமல் போனார்கள். கடைசியாக மே 23ஆம் தேதி தனது தாயிடம் ராஜா ரன்வன்ஷி செல்போனில் பேசியுள்ளார். அதன் பிறகு, இருவரது செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் மோசமான நெட்வொர்க் கவரேஜ் பகுதியில் இருப்பதாக எண்ணிய குடும்பத்தினர், மீண்டும் தொடர்பை ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இளம் ஜோடி காணாமல் போனதாக குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் உள்ளூர் காவல்துறை தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

Advertisment

அந்த தேடுதல் வேட்டையில், மே 24ஆம் தேதி தம்பதி வாடகைக்கு எடுத்த ஸ்கூட்டர், சோஹ்ராரிம் கிராமத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தேனிலவுக்குச் சென்ற இளம் தம்பதியினர் திடீரென்று காணாமல் போன இந்த சம்பவம் மாநில அளவில் பேசுபொருளானது. தம்பதிகளின் டுதலுக்கு உதவுவதற்காக ராஜாவின் சகோதரர் விபின் மற்றும் சோனமின் சகோதரர் கோவிந்த் உள்ளிட்ட தம்பதியினரின் உறவினர்கள் இந்தூரிலிருந்து விமானத்தில் வந்தனர். தம்பதியினரின் பயணப் புகைப்படங்கள் மற்றும் கூகிள் மேப்ஸைப் பயன்படுத்தி அவர்களின் சாத்தியமான வழியைக் கண்டறிந்ததாகக் கூறப்பட்டது. செல்போன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க போலீஸ் மற்றும் உறவினர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டது. இருந்த போதிலும் மேகாலாயாவில் உள்ள மலைப்பகுதிகளில் தொடர் வேட்டையில் இறங்கி வந்தனர்.

தம்பதியினர் காணாமல் போன 8 நாட்களுக்குப், அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் இருந்து ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இறந்த நபரின் வலது கையில் பச்சை குத்தியதன் மூலம் அது ராஜா ரகுவன்ஷி தான் என்று அவரது சகோதரர் உறுதிப்படுத்தினார். அவர் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்த போலீசார், அவரின் மொபைல் போன் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மீட்டனர். மேலும், ஒரு பெண்ணின் சட்டை, மருந்துகள், ஒரு மொபைலின் எல்.சி.டி திரையின் ஒரு பகுதி மற்றும் ஒரு ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்தனர்.

ராஜா ரகுவன்ஷியின் உடலை கண்டுபிடித்த போதிலும், அவரது மனைவி சோனம் என்ன ஆனார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் எங்கு இருக்கிறார்? அவரை யாரேனும் கடத்திச் சென்றுள்ளனரா? என்று கேள்விகள் போலீசிடம் எழுந்துள்ளது. 11 நாட்களாக அவரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்தில் 500 மிமீ மழைப்பொழிவு பதிவாகி வானிலை மோசமாக இருப்பதால், தேடுதல் பணி பாதிக்கப்பட்டுள்ளது.