
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞருக்கு, ஆன்லைன் மூலம் 21 வயது பெண் ஒருவர் பழக்கமானார். இருவரும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி, கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களில், இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு தனித்தனியாக வாழத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில், அந்த பெண் கர்ப்பமானார். இந்த சூழ்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த பெண், கணவருடன் வாழத் தொடங்கியுள்ளார். தான் இல்லாத நேரத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருந்ததால், தன்னை ஏமாற்றியதாக அந்த நபர் சந்தேகித்துள்ளார். இதனால், இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆத்திரமடைந்த அந்த நபர், கடந்த 16ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத கர்ப்பினியான தனது மனைவியின் வயிற்றில் அமர்ந்து, தலையணையைப் பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். உயிருக்கு போராடிய நிலையில் இருந்த பெண்ணில் வயிற்றில் இருந்து கருவில் இருந்த குழந்தை வெளிப்பட்டது என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், மருமகன் மீது போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மனைவியை கொலை செய்த கணவர், காஸ் சிலிண்டரின் வால்வுகளை திறந்து தீ வைத்து கொலையை தீ விபத்தாக மாற்ற முயற்சி செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.