husband hangs wife upside down from roof in UP

மனைவியை மொட்டை மாடியில் தலைகீழாக தொங்கவிட்டு கணவன் சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியைச் சேர்ந்தவர் நிதின் சிங். இவரது மனைவி டோலி. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. நிதின் சிங் தினமும், மதுபோதையில் வீட்டிற்கு வந்து தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி நிதின் சிங் வழக்கம் போல் தனது மனைவியை அடித்து சித்ரவதை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற நிதின் சிங், தனது மனைவி டோலியை மொட்டை மாடியில் தலைகீழாக தொங்கவிட்டு, 5 நிமிடங்கள் அங்கேயே தொங்கவிட்டுள்ளார். இதில், அந்த பெண் அலறி கத்தியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, அவரை பாதுகாப்பாக கீழே இறக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மொட்டை மாடியில் இருந்து தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட அந்த பெண்ணை, அக்கம்பக்கத்தினர் பாதுகாப்பாக கீழே இறக்குகின்றனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து டோலியின் சகோதரர் ரகுநாத் சிங், போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், நிதின் சிங், அவரது சகோதரர் அமித் சிங், அவர்களது தாய் மற்றும் அமித் சிங்கின் மனைவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.