/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/police-car_55.jpg)
மஹராஷ்டிரா மாநிலம், ஜால்னா மாவட்டத்தில் உள்ள கர்லா கிராமத்தில் வசித்து வருகிறார் அமோல். இவரது மனைவி சவிதா (38). இவர்கள் இருவரும், கடந்த ஜூன் 23 ஆம் தேதி அன்று அதிகாலை 4 மணி அளவில் புல்தானா மாவட்டத்திலுள்ள கஜனன் மகாராஜ் சாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் இருவரும் காரில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று அவர்கள் வந்த கார் தீப்பற்றியது. இதில், சவிதா சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.
காவல்துறையினர் சவிதாவின் கணவரான அமோலிடம் விசாரித்தபோது, அவர், “சம்பவம் நடந்த அன்று நாங்கள் வந்த கார், கர்லா லோனர் சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது காருக்கு பின்னால் வந்த சரக்கு வேன் காரை மோதியது. உடனடியாக நான் காரில் இருந்து இறங்கி சரக்கு வேன் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அந்த நேரத்தில் திடீரென்று கார் தீப்பற்றி எரிந்தது. அதில் சிக்கிக் கொண்ட என் மனைவி சவிதா காரின் கதவுகளை திறக்க முற்பட்டார். ஆனால், அவரால் வெளியே வரமுடியவில்லை. அதனைத் தொடர்ந்து நான் எவ்வளவோ முயற்சி செய்தும் மனைவியை காப்பாற்ற முடியவில்லை” என்று கூறியிருந்தார்.
அமோல் கொடுத்த அந்த வாக்குமூலத்தில் பல்வேறு முரண்பாடுகள் இருந்தது. குறிப்பாக அவர்கள் வந்த கார்விபத்தில் சிக்கியதற்கான எந்த தடயங்களும் இல்லாததால், காவல்துறையினருக்கு அமோல் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதனால் காவல்துறையினர் அமோலிடம் கிடிக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அமோல், தன்னுடைய மனைவி சவிதாவை காரில் அடைத்து தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
மேலும், அந்த விசாரணையில், அமோலுக்கும் சவிதாவுக்கும் திருமணமாகி 13 வருடங்கள் ஆன பின்னும் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அமோல் மனமுடைந்து இருக்கிறார். இதன் காரணமாக தனது மனைவியை அடித்து சித்ரவதை செய்துள்ளார். மேலும், ஆண் குழந்தை பெற்று தரவில்லையென்றால் சவிதாவை விவாகரத்து செய்துவிடுவேன் என்று மிரட்டி வந்திருக்கிறார். இதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் அமோல், சவிதாவை கொலை செய்யத்திட்டமிட்டு வந்திருக்கிறார். இதனையடுத்து, கொலை நடந்த அன்று ஆள்நடமாட்டம் இல்லாத இடமான சென்காவ் - கர்லா சாலையில் தனது மனைவியை அமோல், காரில் வைத்து எரித்து கொலை செய்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. அதனையடுத்து, காவல்துறையினர் அமோல் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அமோலிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)