Skip to main content

'இன்னும் எத்தனை நாட்களுக்கு தமிழக மீனவர்கள் துன்பம் அனுபவிப்பர்' - உச்சநீதிமன்றம் வேதனை

Published on 30/09/2022 | Edited on 30/09/2022

 

 'For how many more days Tamilnadu fishermen will suffer'-Supreme Court is agony

 

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் அண்மைக் காலங்களாக அதிகரித்து வருகிறது. நேற்று கூட ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 300க்கும் விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த பொழுது ரோந்து வந்த இலங்கை கடற்படை, ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்ததோடு 10 க்கும் மேற்பட்ட விசைப் படகுகளிலிருந்த வலை உள்ளிட்ட மீன்பிடி பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் மீன் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்தில் திரும்பி ராமேஸ்வரம் மீனவர்கள் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.

 

இந்நிலையில் இப்படி தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்னும் எத்தனை நாட்களுக்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் துன்பம் அனுபவிப்பர் என வேதனை தெரிவித்ததோடு, தமிழக மீனவர்களின் துயர் துடைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என வரும் அக்.14 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை!

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
Heavy rain in 16 districts of Tamil Nadu today

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர். அதே சமயம் வடசென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியாத நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தஞ்சை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியில் 12 செ.மீ மழை பொழிந்துள்ளது. குண்டேரிப்பள்ளம், பந்தலூரில் தலா 10 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023
Chief Minister M.K.Stal's letter to the Union Minister

ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த 21 மீனவர்களில் 13 பேர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் என்றும், 8 பேர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினர் அவர்களிடம் விசாரணை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும்  மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினரால் நேற்று (06.12.2023) கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு. அவர்களது மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மீன்பிடித் தொழிலையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று கைது செய்யப்படுவது அவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதோடு, இலங்கைக் கடற்படையினரால் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது வசமுள்ள 133 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.