How did the voter's details leak? Aadhar, Election Commission need to respond

புதுவையில் பா.ஜ.க சார்பில், ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று, தொகுதி வாரியாக வாட்ஸ் ஆப் குரூப்கள் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அதன் வழியாக தேர்தல் பிரச்சாரம் செய்துவருவது குறித்து சிறப்புப் புலனாய்வு விசாரணை குழுவை அமைத்து விசாரிக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புதுவைதலைவர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்ததது. அப்போது புதுச்சேரி பா.ஜ.க சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆதார் விவரங்கள் திருடப்படவில்லை என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டி வாதிட்டார். கட்சியினர் வீடு வீடாகச் சென்று மொபைல் எண்களை சேகரித்ததாகவும் தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும், ஆணையத்தின் அனுமதி பெறாமல் எஸ்.எம்.எஸ். மூலம் பிரச்சாரம் செய்வது தொடர்ந்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.

Advertisment

மேலும், வீடு வீடாகச் சென்று மொபைல் எண்களை சேகரித்ததாக பா.ஜ.க தரப்பில் கூறுவதை நம்பமுடியாது எனவும், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களுக்கு மட்டும் இந்த எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பதாகவும் குற்றம் சாட்டினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் மார்ச் 29 வரை எஸ்.எம்.எஸ். மூலம் பிரச்சாரம் செய்த பா.ஜ.க.வின் நடவடிக்கை தீவிரமான தனிமனித உரிமை மீறல் எனத் தெரிவித்தனர்.

ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களுக்கு மட்டும் எஸ்.எம்.எஸ்.கள் வந்துள்ளதால், வாக்காளர்களின் விவரங்கள் எப்படிக் கசிந்தன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஆதார் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.கட்சியினர் வீடு வீடாகச் சென்று விவரங்களைச் சேகரித்ததாகக் கூறிய பா.ஜ.க.வின் வாதத்தை ஏற்கமறுத்த நீதிபதிகள், இதுகுறித்து வழக்கில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஆதார் ஆணையமும், தேர்தல் ஆணையமும் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Advertisment