
ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீரில் இந்தியாவில் இஸ்லாமிய போதனைகளை பரப்பிய சூபி ஞானியான காஜா மொய்னுதீன் சிஷ்டியின் பெயரில் ஒரு பழம்பெரும் தர்கா ஒன்று அமைந்துள்ளது. உலகெங்கிலும் புகழ் வாய்ந்த இந்த தர்காவுக்கு, ஒவ்வொரு ஆண்டும் உருஸ் திருவிழாவின் போது நாட்டின் பிரதமர் புனித போர்வை அனுப்பி வைப்பது வழக்கம். முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் தொடங்கப்பட்ட இவ்வழக்கம், பிரதமர் மோடி வரை ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தர்காவானது அங்கிருந்த இந்துக்களின் சிவன் கோயிலை இடித்து கட்டப்பட்டுள்ளதாக அஜ்மீரில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. இந்து அமைப்பான இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவர் அளித்திருந்த அந்த மனுவில், ‘இன்று அஜ்மீர் தர்கா இருக்கும் இடத்தில் கி.பி 11 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு சிவன் கோவில் இருந்தது. அதன் அருகில் ஒரு சமணக் கோவிலும் இருந்தது. காஜா மொய்னுதீன் சிஷ்டி, முகமது கோரியுடன் அவரது ஆலோசகராக இந்தியா வந்திருந்தார். அப்போது அஜ்மீர் அஜய் மேரு என்று அழைக்கப்பட்டது. அஜ்மீர் பிருத்விராஜ் சவுகானின் பிறப்பிடமாகவும் உள்ளது. சிவன் கோயிலை இடித்து தர்கா கட்டப்பட்டது என்பது தெளிவாகிறது.
தர்கா வளாகத்திற்குள் பாதாள அறைக்கு செல்லும் பாதாள பாதைக்கு அடியில் சிவலிங்கம் இருக்கிறது. பாதாள அறைக்கு செல்லும் நிலத்தடி பாதையின் அடியில் உள்ள தெய்வத்தை தரிசனம் செய்ய இந்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அஜ்மீர் தர்கா இருந்த இடத்தில் உள்ள அசல் மகாதேவ் கோயில் பகுதி இடிக்கப்பட்டு, மீதமுள்ள கட்டமைப்பு மற்றும் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் கொள்ளைகளைப் பயன்படுத்தி, ஒரு தர்கா எழுப்பப்பட்டது. அஜ்மீர் தர்கா இருக்கும் இடத்தில் சிவன் கோயில் இருந்ததாக கல்வியாளர் ஹர் பிலாஸ் சர்தா கடந்த 1911ஆம் ஆண்டு எழுதிய அஜ்மீர் ஹிஸ்டாரிகல் அண்ட் டிஸ்கிரிப்டிவ் என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இது குறித்து தொல்லியல் துறை ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும். அதன் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அஜ்மீர் தர்காவை சங்கத் மோசன் மகாதேவ் கோயிலாக அறிவிக்க வேண்டும். தர்கா என எந்த பதிவு இருந்தாலும் அதை ரத்து செய்ய வேண்டும். கோயிலில் வழிபாடு தொடங்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (28-11-24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் மற்றும் இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 20ஆம் தேதி (20-12-24) ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில், உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஜமா மசூதியை, இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டிருந்தாக தொடரப்பட்ட வழக்கில், மசூதியை ஆய்வு செய்ய உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நவம்பர் 19ஆம் தேதி உள்ளூர் போலீஸார் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் மசூதியில் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, ஆய்வு செய்வதற்காக வந்த ஆய்வுக் குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மீது கல் வீச்சு தாக்குதல் நடந்தது. இதனையடுத்து, ஏற்பட்ட வன்முறையில் அங்கு 4 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நடந்த சில தினங்களிலே, அஜ்மீர் தர்கா குறித்த வழக்கு விசாரணைக்கு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.