
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள வான்வொரி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை மஹின் மற்றும் மொசின் காஜி என்ற முஸ்லிம் ஜோடிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதே சமயம் மண்டபத்திற்கு அருகே திறந்த வெளி மைதானத்தில் நரேந்திரா பாட்டீல் - சன்ஸ்குரிதி பாட்டீல் என்று இந்து சோடிக்கும் திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மூகூர்த்த நேரத்திற்கு முன்பாக திடீரென கன மழை பெய்துள்ளது. இதனால் செய்வதறியாமல் திருமணத்திற்கு வந்தவர்கள் அங்கும் இங்கு மழைக்காக ஒதுங்கி நின்றனர். முகூர்த்த நேரமும் நெருங்கியதால் என்ன என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்றனர்.
இந்த சூழலில் தான் அருகே இருக்கும் திருமண மண்டபத்திற்கு சென்ற இந்து குடும்பத்தினர், திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்திய முஸ்லிம் குடும்பத்தினரிடம் உதவி கேட்க, அவர்களும் உடனடியாக திருமண மேடையை பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மண்டபத்தில் இந்து முறைப்படி திருமண சடங்குகள் நடந்த பிறகு நரேந்திரா பாட்டீல் - சன்ஸ்குரிதி பாட்டீல் இருவருக்கும் திருமணம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து இந்து மற்றும் முஸ்லிம் தம்பதியினர் ஒரே மேடையில் நின்று போஸ் கொடுத்தனர். உறவினர்கள் மாறி மாறி புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், மத வேறுபாடு அனைவரும் ஒன்றாக திரண்டு இரு ஜோடிகளையும் வாழ்த்தி, உணவருந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.