கொரோனா வைரஸ், சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்டதாகும். உலகம் முழுவதும் 18 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் இந்த வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை உலக அளவில் 213 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில் சீனாவில் இருந்த 234 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டு, சிறப்பு முகாமில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பற்றி பிரபல ஹிந்தி நடிகர் அர்ஷத் வார்சி தனது டிவிட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்த மீம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சீனர்களை அடித்து ஒரு மூட்டையில் போட்டு கட்டிவிட வேண்டும் என்ற கோணத்தில் உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த மீமை நீக்கும் படி கோரிக்கையும் வலுத்து வருகிறது.