Skip to main content

எட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை....அடித்துச் செல்லப்பட்ட பஸ்.... இமாச்சல் கனமழை

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
bus


கடந்த சில நாட்களாக இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சுற்றுலா பகுதியான மணாலியில் 127.4 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. பீஸ் நதியில் அளவைக் கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் ஆளில்லா சுற்றுலா பஸ் ஒன்று இந்த பீஸ் நதியில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த பஸ்ஸில் ஆட்கள் இல்லை என்பதால் பெரும் உயிர் சேதம் நடந்தேராமல் தவிற்கப்பட்டுள்ளது. அதேபோல, சரக்கு லாரி ஒன்றும் இந்த வெள்ளத்தில் அடித்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
 

இமாச்சலில் இன்றும் கனமழை பெய்யும் என்பதால் எட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இமாச்சலத்தில் ஒரு புறம் கனமழை, ஒரு புறம் கடும் பனிபொழிவு என்று இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சபாநாயகரின் அதிரடி முடிவு; உச்சநீதிமன்றத்தை நாடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Speaker's Action Decision; Congress MLAs sought the Supreme Court

இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அம்மாநில முதல்வராக சுக்விந்தர் சிங் ஆட்சி செய்து வருகிறார். இங்கு மொத்தம் உள்ள 68 எம்.எல்.ஏக்களில், காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பா.ஜ.க.வுக்கு 25 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மூன்று எம்.எல்.ஏக்கள் எந்தக் கட்சியையும் சேராத சுயேட்சை எம்.எல்.ஏக்களாக இருக்கின்றனர். இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய இணையமைச்சர் எல். முருகன் உள்பட 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 15 இடங்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேசத்தில் 10, கர்நாடகாவில் 4, இமாச்சலப் பிரதேசத்தில் 1 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது.

அந்த வகையில் இமாச்சலப்பிரதேசத்தில் காலியாக இருந்த ஒரு இடத்துக்கு ஆளும் காங்கிரஸ் சார்பில் ஒருவரும், எதிர்க்கட்சியான பா.ஜ.க சார்பில் ஒருவரும் என இருவர் போட்டியிட்டனர். ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏக்கள் இருந்தும், 25 எம்.எல்.ஏக்கள் கொண்ட பா.ஜ.க.வுக்கு 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், 3 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். அதனால், பா.ஜ.க. வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்ததால் அம்மாநில காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைவர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் கடந்த மாதம் 28 ஆம் தேதி காலை அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து இமாச்சலப்பிரதேச சட்டசபையில், நிதி மசோதா தாக்கல் செய்வதற்காக கடந்த மாதம் 28 ஆம் தேதி சட்டசபை கூடியது.

அப்போது, எதிர்க்கட்சி பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதாகவும், சபாநாயகர் அறையில் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதனால், பா.ஜ.க எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் உட்பட 15 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவை சபாநாயகர் கடந்த 1 ஆம் தேதி சஸ்பெண்ட் செய்வதாக அதிரடி உத்தரவிட்டார். மேலும் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்த 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கீழ் ஹிமாச்சலப் பிரதேசத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். 

Next Story

தமிழக அரசின் திட்டத்தைப் பின்பற்றும் டெல்லி மற்றும் இமாச்சல் அரசுகள்!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
govt of Delhi and Himachal are following the plan of the TN govt

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி (15.09.2023) காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் மாதந்தோறும் ரூ.1000 பெற்றுப் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, புதிதாகக் கண்டறியப்பட்ட 7 இலட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் 18 வயது நிரம்பிய பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இமாச்சலப்பிரதேசத்தில் 18 முதல் 60 வயதுடைய மகளிருக்கு  மாதந்தோறும் ரூ. 1,500 வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சுகு அறிவித்துள்ளார். இதன்மூலம் சுமார் 8 லட்சம் பெண்கள் பயன்பெற உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.