Skip to main content

போலி சமூக வலைத்தள கணக்கு; ஆளுநர் எச்சரிக்கை

Published on 01/02/2023 | Edited on 01/02/2023

 

himachal pradesh governor name create fake instagram id 

 

சமீப காலமாகப் பிரபலங்கள் பெயரில்  சமூக வலைத்தளங்கள் மூலம் போலி கணக்குகளை  உருவாக்கி அதன் மூலம் பணம் பறிக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

 

இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக் பெயரில் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் போலி கணக்குகளை உருவாக்கி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஆளுநரின் கவனத்திற்குச் சென்றதும் தன்னுடைய சமூக வலைத்தள கணக்கின் மூலம் யாராவது பணம் கேட்டால் யாரும் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதுபோன்று பணம் பறிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளார். மேலும் இந்த போலி சமூக வலைத்தள கணக்குகளை நீக்கும்படி இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை ஹிமாச்சல பிரதேச போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

மாநிலத்தின் ஆளுநர் ஒருவரின் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகளை உருவாக்கி பணம் பறிக்க முயன்ற சம்பவம் ஹிமாச்சல பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

பாஜகவில் இணைந்த பிரியங்கா காந்தியின் ஆதரவாளர்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Supporter of Priyanka Gandhi who joined BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய ஆதரவாளர் தஜிந்தர் சிங் பிட்டு பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சில மணி நேரங்களிலேயே இவர் பாஜவில் இணைந்துள்ளார். ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியின் செயலாளராக பதவி வகித்து வந்த தஜிந்தர் சிங் நேற்று (20.04.2024) தனது ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் அளித்தார். அதனைத் தொடர்ந்து ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் தவுத்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்தது குறித்து தஜிந்தர் சிங் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “கடந்த 35 வருடங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். இன்று அக்கட்சியில் இருந்து விலகிவிட்டேன். யாருக்கு எதிராகவும் நான் பேச விரும்பவில்லை. மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக, நான் பாஜகவில் இணைந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.